பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த பதவிக்காலத்துக்கு இடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், பதவிக்காலம் நிறைவடைந்த அறுபது நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
தேர்தல் நடத்தப்படும் தேதியை அந்நாட்டின் தேர்தல் கமிஷனர் முடிவு செய்த பின்னர் பாகிஸ்தான் அதிபரோ, பிரதமரோ தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.இந்நிலையில், வரும் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பாராளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெறலாம் என அந்நாட்டின் பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.
அநேகமாக, ஜூலை 26, 28 அல்லது 29-ம் தேதி வாக்குப்பதிவுக்கான தேதியாக அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.ஜூலை 27-ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் அன்று தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு எனவும் அந்த ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மக்களவையில் 272 இடங்கள் பொது தொகுதிகளாகவும், 60 இடங்கள் மகளிர் மட்டும் போட்டியிடும் தொகுதிகளாகவும், 10 இடங்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கான தொகுதிகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷரிப்) தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலம் 199 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 137 ஆகவும் உள்ளது நினைவிருக்கலாம்.