மியான்மரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் ஊர்வலம்

Myanmar: மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி என்ன? சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் நடத்திய ஊர்வலத்தில் என்ன நடந்தது?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2022, 03:52 PM IST
  • மியான்மாரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்.
  • நியாயம் கேட்டு உறவினர்கள் அமைதி போராட்டம்.
  • இது குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளொயிட்டுள்ளார்.
மியான்மரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் ஊர்வலம் title=

மியான்மரில் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டுவர கோரியும் செங்குன்றம் அருகே உறவினர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினர். மணிப்பூர் மாநிலம் மோரே என்ற நகரம் மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம் தென்கிழக்கு ஆசியாவின் வாசல் என அழைக்கப்படுகிறது.  

மியான்மரிலிருந்து நாடு திரும்பிய தமிழர்கள் இங்கு தான் வசிக்கின்றனர். அப்படி 28 வயதான மோகன் என்பவரும் வசித்து வந்தார். அவரது உறவினர் சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் பாலகணேசன் நகர் பகுதியை சேர்ந்த அய்யனார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் மோரையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மியான்மரில் உள்ள தம்முவுக்கு சென்றுள்ளனர். 

அங்கு கடந்த 5 ஆம் தேதி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கண்டித்து சென்னை செங்குன்றம் பாடியநல்லூரில் உள்ள அய்யனாரின் உறவினர்கள் அவர்களது இல்லத்தில் இருந்து பாடியநல்லூர் சந்திப்பு வரை அமைதி ஊர்வலம் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் அனுமதி இன்றி ஊர்வலம் நடத்தியதாக அவர்களை தடை செய்து கலைந்து போகச்செய்தனர்.

மேலும் இது குறித்து அவரது உறவினர்கள் தெரிவிக்கையில், தமிழக முதல்வரும் மணிப்பூர் முதல்வரும் மத்திய அரசுடன் பேசி அய்யனாரின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். திடீரென பர்மா தமிழர்கள் ஊர்வலமாக சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | Dubai: லாட்டரியில் ₹20 கோடி வென்ற இந்தியர்

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கான நீதியைப்பெற இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். 

‘ இந்தியா - மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம் தெங்னௌபல் மாவட்டத்தில் வசித்து வந்த மோகன், அய்யனார் என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதற்காக, மியான்மர் நாட்டு எல்லையிலுள்ள தமு என்ற இடத்திற்குச் சென்றபோது, அந்நாட்டு இராணுவத்தின் ஆதரவுப்பெற்ற ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு தமிழர்களும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடந்த காட்சிகள் உள்ளத்தை உறையச் செய்துவிட்டன. 

உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது. உயிரிழந்த இருவரில் தானி ஓட்டுநரான மோகன் அண்மையில் திருமணம் முடித்தவர் என்பது மனத்துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. உயிரிழந்த மோகன் மற்றும் ஐயனார் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அநியாயமாகக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் மியான்மர் அரசு தொடர் அலட்சியம் செய்வது, அந்நாட்டு அரசே கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறதோ என்ற ஐயத்தையும், தமிழர்கள் என்பதனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனரா என்ற ஐயத்தையும் ஒருசேர எழுப்புகிறது. 

மியான்மர் நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டிக்காமலும், அந்நாட்டு அரசிடம் உரிய விளக்கம் கேட்காமலும் இந்திய ஒன்றிய அரசு அமைதி காப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒருவேளை பாகிஸ்தான் நாட்டில் வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தால் மோடி அரசு இப்படி வாய்மூடி அமைதி காத்திருக்குமா? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுகிறது. 

குஜராத் மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பாஜக அரசும், அதன் தலைவர்களும் எத்தகைய துரிதமாக எதிர்வினையாற்றினர் என்பதை யாரும் மறந்துவிடவில்லை.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் மெத்தனப்போக்கோடு அலட்சியமாக இருக்காமல், தமிழர்களும் இந்த நாட்டின் அரசியலமைப்பை ஏற்று வாழும் குடிமக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வெளியுறவுத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சிங்கப்பூரில் பணியில் இருந்த தமிழ் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்! காரணம் என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News