பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், தேசிய விருது விழாவில் பங்கேற்கவில்லை.
2019-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுகளை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கயுள்ளார்.
இந்த விழா விக்ஞான் பவனில் நடைபெறுகிறது. பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நாளை உயரிய தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் கூடுதல் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கலந்து கொள்கிறார்.
வழக்கமாக, தேசிய விருதுகள் குடியரசுத் தலைவரின் கைகளால் வழங்கப்படுவதுதான் வழக்கம். ஆனால், இம்முறை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்குகிறார். இந்தியாவின் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விக்கி கவுசால் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோரால் பகிர்ந்து ஏற்றுக்கொள்ளப்படும். சிறந்த நடிகைக்கான விருது நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருது பாலிவுட் ‘உரி’ திரைப்பட இயக்குநர் ஆதித்ய தாருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் அவர் இந்த விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே நாளை (இன்று) டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது. இது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
T 3584/5/6 -
Down with fever .. ! Not allowed to travel .. will not be able to attend National Award tomorrow in Delhi .. so unfortunate .. my regrets ..— Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019