சென்னை: 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாகும். தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல்தங்கம் இதுவாகும்.
திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற கோமதிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு சிலர் நிதி உதவியும் அளித்து வருகின்றனர். அந்தவகையில், கோமதிக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி அளித்தார் நடிகர் ரோபோ ஷங்கர்.
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், ஆசிய தடகள போட்டியில் அற்புதமாக தனது திறமையை வெளிக்காட்டிய அன்பு சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனது தந்தை மற்றும் பயிற்சியாளர் யொருவரும் இறந்த பிறகும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் கூட, விடா முயற்சியோடு, விஸ்வரூப வெற்றியா ஓடி ஜெயித்த தங்கை மங்கை கோமதி சகோதரிக்கு ஒரு இந்தியனாகவும், தமிழனாகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு சகோதரிக்கு என்னால் முடிந்த சிறு தொகையாக ரூ. 1 லட்சம் கொடுப்பதை பெருமையாக நினைக்கிறேன். சகோதரி மேலும் மேலும் வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தினார்.