Meiyazhagan Movie Reivew Tamil : 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் கார்த்தி-அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மெய்யழகன். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், படம் உண்மையாகவே நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதை இங்கு பார்ப்போம்.
ஒருவரிக்கதை:
யார் என்றே தெரியாத ஒருவர், தனக்கு திகட்ட திகட்ட அன்பு காட்டினால் ஒருவரால் என்ன செய்ய முடியும்? விவரிக்கிறது, மெய்யழகன் திரைப்படம்.
விரிவான கதை:
சொத்து பிரச்சனை காரணமாக, தனது இளமை பருவத்திலேயே உயிருக்கு உயிராக நேசித்த வீட்டை காலி செய்து குடும்பத்துடன் சென்னைக்கு வருகிறார், அருள்மொழி வர்மன் (அரவிந்த் சாமி). தன் தங்கையின் திருமணத்திற்காக, 22 வருடங்கள் கழித்து ஊருக்கு வர நேர்கிறது. வந்த இடத்தில் “அத்தான் அத்தான்” என அழைத்து, அருளுடன் ஒட்டிக்கொள்ளும் கார்த்தி, அருள்மொழியை விழுந்து விழுந்து கவனிக்கிறார். கார்த்தியை யாரென்றே தெரியவில்லை என்றாலும், மனம் புண்படும் என்பதற்காக தெரிந்தது போல காட்டிக்கொள்கிறார், அருள். கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்ஸை தவறவிடும் அரவிந்த் சாமி, அவருடனேயே தங்க நேர்கிறது.
ஒரு நாள் இரவை கார்த்தியுடன் குடித்து, அரட்டை அடித்து கழிக்கும் அரவிந்த் சாமி, அவரை பற்றி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார், அவரது பெயரை தவிர. தன்னை நன்றாக தெரியும் என்று கூறி, தன்னிடம் இப்படி அன்பு காட்டும் ஒருவனை, தனக்கு தெரியவில்லையே என்று மனம் உடைந்து, கார்த்தியிடம் சொல்லாமல்-கொள்ளாமல் அவரது வீட்டில் இருந்து வெளியேறுகிறார் அருள். இறுதியில் அவர் கார்த்தியின் பெயர் என்ன என தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அருளுக்கும் என்ன சம்பந்தம்? கடைசி 5 நிமிடங்கள் வரை, இந்த இரு கேள்விகளுடன் மட்டும் பயணிக்கிறது திரைப்படம்.
அன்பால் செம அடி..
ஊர் பாசம், சொந்தங்களுக்குகள் சொத்து பிரச்சனையால் வரும் வன்மம், விட்டுப்போன சொந்தங்களை திரும்ப பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி என இயல்பு வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை உண்மைக்கு அருகில் சொல்ல நினைத்து, வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். படத்தின் ஆரம்பம் முதல், க்ளைமேக்ஸ் வரை ரசிகர்களுக்கு எங்கு திரும்பினாலும் அன்பால் அடிதான்!
முக்கிய கதாப்பாத்திரங்களாக இருந்தாலும் சரி, 2 நிமிடம் வந்து போகும் சிறு பாத்திரங்களாக இருந்தாலும் சரி, அனைவரும் மனதில் நிற்கும் வகையில் அனைத்து கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம் பெற்றுள்ள காமெடி வசனங்கள், இயல்பாக நாலு பேருக்குள் நடக்கும் உரையாடலில் எழும் தற்செயலான நகைச்சுவை போல இருப்பது, ரசிகர்களை கதாப்பாத்திரங்களுக்கு இன்னும் நெருக்கமாக உணர செய்கிறது.
கதாப்பாத்திரங்களின் பங்கு..
‘மெய்யழகன்’ படத்தில் வருவது போல, நிஜத்திலும் உண்மையாகவே ஒரு ஆள் இருந்தால், “இப்படியெல்லாம் ஒருவரால் இருக்க முடியுமா?” என்று நமக்கே தாேன்றும். அந்த அளவிற்கு, கார்த்தியின் கதாப்பாத்திரம் கள்ளம் கபடமற்ற அன்பை காட்டுவது போல எழுதப்பட்டிருக்கிறது. நன்கு அறிந்தவர்களே, ஆதாயத்திற்காக பிறருடன் பாசமாக பேசும் இந்த காலத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, பல வருடங்களுக்கு முன்பு தெரிந்தவர் மீது எல்லையற்ற அன்பு காட்டும் கார்த்தியின் கேரக்டருக்கு 100க்கு 150 மார்க் கொடுக்கலாம்.
சொந்தங்களை இழந்து, நகர வாழ்க்கைக்காக தன்னை மாற்றிக்கொண்ட நடுத்தர வயது மனிதராக வரும் அரவிந்த் சாமி, பாடல் பாடியும் மைக்கேல் ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனமாடியும் அசத்துகிறார். தன் மீது இவ்வளவு அன்பு காட்டும் ஒருவனை பார்த்து, ஆடிப்போய் “இவனை யார்னே நினைவுபடுத்த முடியலையே..” என்று உடைந்து அழும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.
மேலும் படிக்க | இந்த வாரம் ஒரே நாளில் வெளியாகும் 6 பெரிய திரைப்படங்கள்! எதை முதலில் பார்க்கலாம்?
அரவிந்த் சாமியின் மாமாவாக வரும் ராஜ்கிரணின் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் தள்ளாத முதுமையும், முதிர்ச்சியும் தெரிகிறது. ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்திருக்கின்றனர்.
நீளத்தை குறைத்திருக்கலாம்..
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்கள்தான், படத்தின் பெரும்பான்மையான காட்சிகளாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், ஜல்லிக்கட்டு தடை, தமிழ் மன்னர்களின் வரலாறு போன்ற விஷயங்கள் குறித்து பேசுகிறார் நடிகர் கார்த்தி. இவை தெரிந்து கொள்ள வேண்டியவைதான் என்றாலும், இக்காட்சிகளை இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம் என யோசிக்க வைக்கிறது.
மகேந்திரன் ஜெயராஜுவின் கேமரா, தஞ்சாவூரையும், சென்னையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில், கமல்ஹாசன் பாடிய “போய்வா..கலங்காதே” பாடல் மனதில் நிற்கிறது.
யாருக்கெல்லாம் படம் பிடிக்காது?
வாழ்வில் மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு, பிறருக்கு அன்பு காட்ட தெரியாதவர்களுக்கு, பிறர் மனதை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு படம், நிச்சயமாக பிடிக்காது. அதே போல தலையை சுற்றி மூக்கைத்தொடும் நோக்கில் பேசுபவர்களை பிடிக்காதவர்களுக்கும், இப்படம் பிடிக்காது.
மொத்தத்தில்..
நாம் எதை பிறருக்கு கொடுக்கிறோமாே, அதையே பன்மடங்காக இன்னொரு காலத்தில் எதிர்பாராத வகையில் திரும்ப பெருவோம் என்பதை கூறுகிறது படம். எனவே, தெளிவான மனதுடன், பொருமையை கடைப்பிடித்து, அன்பு மழையில் நனைய விரும்பினால், கண்டிப்பாக மெய்யழகன் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.
மேலும் படிக்க | GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ