பெங்களூருவில் பிரபல கன்னட திரைப்பட நடிகர் காசிநாத் உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் ஏராளமனோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்த பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் காசிநாத் (வயது 67) உடல் நலக்குறைவால் நேற்று காலை காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை காலமானார். அவருக்கு சந்திரபிரபா என்கிற மனைவியும் அபிமன்யு என்கிற மகனும் அம்ருதவர்ஷினி என்கிற மகளும் உள்ளார்கள்.
இவர் சுமார் 43 கன்னட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். பல்வேறு படங்களையும் தயாரித்து இருக்கிறார். கடந்த வருடம் வெளியான செளகா படத்தில் நடித்திருந்தார். காசிநாத்தின் மறைவுக்கு கன்னட நடிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் காசிநாத் மறைவுக்கு முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.