ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்

மல்லி என்ற மலைவாழ் பெண்ணை மீட்கப் போராடும் ஒருவனும், மண்ணை மீட்கப் போராடும் ஒருவனும் நேர் எதிர்திசையில் செயல்பட்டால் அதுவே இரத்தம் ரணம் ரௌத்திரம்.

Written by - K.Nagappan | Last Updated : Mar 25, 2022, 01:24 PM IST
  • ராஜமௌலிக்கு ஓரளவே வெற்றி கிட்டியுள்ளது
  • எல்லா நியாயங்களையும் இம்மி குறையாமல் ஜூனியர் என்.டி.ஆர் செய்துள்ளார்
  • ராம்சரண் தேஜா பிரமாதப்படுத்தியிருக்கிறார்
ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்  title=

மல்லி என்ற மலைவாழ் பெண்ணை மீட்கப் போராடும் ஒருவனும், மண்ணை மீட்கப் போராடும் ஒருவனும் நேர் எதிர்திசையில் செயல்பட்டால் அதுவே இரத்தம் ரணம் ரௌத்திரம்.

பிரிட்டீஷ் ஆட்சியில் தான் நினைத்ததையெல்லாம் வளைத்துப் போட்டு சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் கவர்னர் ஸ்காட் துரை (ராய் ஸ்டீவன்சன்). அவரது மனைவி அலிசன் டூடி மலைவாழ் பெண்ணின் வரையும் கலையைப் பார்த்து வியக்கிறார். அதற்காக இரு சில்லறைகளைச் சிதறவிட கவர்னர் உத்தரவிடுகிறார். பழங்குடியினத் தாய் அதை அடிமைபோல் பாவித்து ஏற்றுக்கொள்கிறார். அதற்குப் பிறகுதான் தெரிகிறது அது வரைந்ததற்கான பாராட்டுப் பரிசு அல்ல, அச்சிறுமியைத் தங்களுடன் அழைத்துச் செல்வதற்கான விலை என்று. தன் மகளைத் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கதறும் தாய் கொலை செய்யப்படுகிறார். இதனால் கொதித்தெழும் பழங்குடியினச் சமூகத்து இளைஞன் பீம், மல்லியை மீட்க சபதமெடுக்கிறார். அதற்காக டெல்லி சென்று தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறார். அங்கு பிரிட்டீஷ் காவல்துறையில் பணிபுரியும் ராம் (ராம்சரண்) நட்பு கிடைக்கிறது. இருவரும் இருவேறு நோக்கங்களுக்காகப் போராடுகிறார்கள். ஆனாலும், அதைப் பகிர்ந்துகொள்ளாமல் நட்புடன் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் எதிரெதிரே நிற்கும் சூழல் உருவாகிறது. ஏன் அந்த நெருக்கடி ஏற்படுகிறது, ராம்சரண் யார், அவரது பின்னணி என்ன, எந்த நோக்கத்துக்காக காவல்துறையில் சேர்ந்தார், மல்லியை மீட்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. 

ஹைதராபாத்தின் விடுதலைக்காகப் போராடிய பழங்குடிச் சமூகத்தின் தலைவர் கொமாரம் பீம் வாழ்க்கையையும், பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாகக் களப் பணியாற்றிய புரட்சி வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் வாழ்க்கையையும் தழுவி கற்பனையாக இருவரையும் சந்தித்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைத் திரைப்படத்துக்கே உரிய சுவாரஸ்யத்துடன் கொடுக்க முயன்றுள்ளார் ராஜமௌலி. அதில் அவருக்கு ஓரளவே வெற்றி கிட்டியுள்ளது. 

கொமாரம் பீம் எனும் பழங்குடித் தலைவர் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அவரது ஆவேசம், வெள்ளந்தித் தனம், தூய்மையான அன்பு, அறியாமை, கோபம், லட்சியம், உடனிருக்கும் தோழமைக்காகப் போராடும் குணம் என அனைத்து நல்லியல்புகளுக்கும் மிகச் சிறந்த பரிமாணத்தைக் கொடுத்து தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கதாபாத்திரம் செதுக்கப்பட்டுள்ளது. அதற்கான எல்லா நியாயங்களையும் இம்மி குறையாமல் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சினிமா உலகின் பாகுபலி ‘ராஜமெளலி’ : சீரியல் இயக்குநர் டூ நம்பர் 1 இயக்குநர்!

சீதாராம ராஜு எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா பிரமாதப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திர வார்ப்புக்கேற்ற உடல்வாகு, தோற்றம், உடல்மொழி, பேச்சு, கம்பீரம், சூது, சதிகளை அறிந்து முறியடிக்கும் சாமர்த்தியம் என சகல விதங்களிலும் சபாஷ் பெறுகிறார். 

ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்டோருக்குப் படத்தில் பெரிய வேலை இல்லை. ஓரிரு காட்சிகளில் வந்துபோகிறார்கள். அவர்கள் இருப்பு அர்த்தமுள்ளதாக அமையவில்லை. சத்ரபதி சேகர், ராஜீவ் கனகலா, ராகுல் ராமகிருஷ்ணா, எட்வர்ட், ஒலிவியா மோரிஸ் ஆகியோர் பெருங்கூட்டத்துக்குள்ளும் கவனிக்க வைக்கிறார்கள். ராய் ஸ்டீவன்சன் மிரட்டலான நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். 

கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பீரியட் படத்துக்கான துல்லியத்தையும், நம்பகத்தையும் கொடுத்து அசர வைத்துள்ளது. சண்டைக்காட்சிகளில் நம் தோள்களில் கேமரா இருப்பது போன்ற லாவகமான உழைப்பை செந்தில் வழங்கியுள்ளார். மதன் கார்க்கியின் வரிகளில் உயிரே, பீம் பாடல்களுக்கு மரகதமணி உயிர் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் மொத்த ஆன்மாவையும் இவ்விரு பாடல்கள் மிகச் சரியாகக் கடத்துகின்றன. பின்னணி இசையிலும் படத்தின் உயிரோட்டத்துக்கு உதவியுள்ளார் மரகதமணி. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் நேர்த்தி பளிச்சிடுகிறது. ஸ்ரீனிவாஸ் மோகனின் விஷூவல் எஃபெக்ட்ஸ் படத்துக்கு மிகப்பெரிய பலம். 

பாகுபலி படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தைத் தூக்கும்போதே இது ஃபேண்டஸி படம் என்பதை நிறுவி ரசிகர்களை அதற்கேற்ற மனநிலைக்குத் தயார் செய்த ராஜமௌலி இதில் கொஞ்சம் சறுக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சுதந்திரப் போராட்டக் கதையை ரத்தமும் சதையுமாக சொல்ல வந்தவர் அடுத்தடுத்து திரைக்கதையின் திசையை எப்படிக் கொண்டுசெல்வதென்று தெரியாமல் நகர்த்த ரொம்பவே தடுமாறியிருக்கிறார். அது இரண்டாம் பாதியில் அப்பட்டமாகத் தெரிகிறது. நட்பு, லட்சியம் என இரண்டில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்ற கதாபாத்திரத்தின் குழப்ப மனநிலையை மிகவும் கச்சிதமாகக் கடத்தியவர் அடுத்து என்ன என்பதற்கான படலங்களில் தொய்வைப் படரவிட்டதுதான் ஏன் என்று தெரியவில்லை. அதனால் இரண்டாம் பாதி பலவீனமாக உள்ளது. நம்ப முடியாத சாகசக் கதையாகவே இருப்பதால் லாஜிக் மருந்துக்கும் இல்லை. 

அதேசமயம் இருபெரும் ஹீரோக்களுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் ரசிகர் கூட்டம் வரவேற்கும் அளவுக்கான விருந்தைப் படைக்க அவர் தவறவில்லை. கதையைப் பொறுத்து ஹீரோக்களுக்கு வெயிட் ஏற்றாமல், ஹீரோக்களைப் பிரதானமாக வைத்தே கதையை சிருஷ்டித்திருப்பதுதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது. 

லாஜிக் வேண்டாம், பிரம்மாண்டம் என்ற மேஜிக் போதும், எமோஷன் எல்லாவற்றையும் மறக்கடிக்க வைக்கும் என்று நம்பும் ரசிகராக நீங்கள் இருந்தால் ஆர்ஆர்ஆர் படத்தை நீங்கள் உச்சி முகர்ந்து கொண்டாடுவீர்கள். எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனாலும் பெரிய அளவில் இப்படம் ஏமாற்றாது. பாகுபலி இயக்குநரின் அடுத்த படம் என்ற எண்ணத்தோடு சென்றால் மட்டும் இப்படம் உங்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாது. 

மேலும் படிக்க | RRR Box office: 800 கோடி வசூல், பிளாக்பஸ்டர் சாதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

 

 

Trending News