புதுடெல்லி: நாட்டில் வாடகை வீடுகளில் நிலவி வரும் பிரச்சனை போக்கவும், வாடகை வீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, மாதிரி வாடகை சட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இந்தச் சட்டம் வீடு வாடகைக்கு எடுப்பவர்களுக்கும், கடையை வாடகை எடுப்பவர்களுக்கும் பொருந்தும். அதன்படி, வாடகைக்கு வீடு வாங்குவோரிடம் பாதுகாப்பு வைப்புத்தொகையாக இரண்டு மாதங்களுக்கு மேலாக நில உரிமையாளரால் கோர முடியாது. புதிய சட்டத்தின் வரைவு வீடு-கடை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரரின் நலன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதுவும் குறிப்பாக மெட்ரோ நகரங்களில் வேலை நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ, தொழில் நிமித்தமாகவோ பல குடும்பங்கள் குடி பெயரும். அப்படி நகரங்களுக்கு செல்லும் போது வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டின் உரிமையாளர்கள் தாங்கள் நினைத்தபடி வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, மின்சாரத் தொகை, குடிநீர் தொகை, வீட்டைத் துடைப்பவருக்கான தொகை, வீட்டுக்காவலர் தொகை, என பல தொகைகளைக் வசூலித்து வருகின்றனர். இதனால் முன்பணம், வாடகை ஒப்பந்தம் மற்றும் குத்தகை ஆகிய விஷயங்களில் கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் ஆகியோர்களுக்கு இடையில் சிக்கல்கள் எழுகின்றன.
இந்த சிக்கல்களை போக்க மத்திய அரசு மாதிரி வாடகை சட்டத்தை (Model Tenancy Act) உருவாக்கி வருகிறது. இந்த சட்டத்தில் குத்தகைதாரர், வாடகைதாரர் இரு தரப்பினரின் நலனை மையமாக வைத்து சட்டம் இயற்றப்படுகிறது.
2022-க்குள் அனைவருக்கும் வீட்டுத் திட்டம் மற்றும் வாடகை வீடுகளை மேம்படுத்துவதற்கு மாதிரி குத்தகை சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மாடல் குத்தகை சட்டத்தின் பின்னால் உள்ள குறிக்கோள், வாடகை வீடுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்த தகவல்களை உருவாக்குவது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, வாடகை வீடுகளில் தெரிவுநிலை இருக்கும் என்று மத்திய அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த வரைவின் நகல் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
> இந்தச் சட்டத்தின்படி, நில உரிமையாளர் வீட்டை ஆய்வு செய்ய அல்லது வீட்டை சரிசெய்ய விரும்பினால், அதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்.
> இரு தரப்பினருக்கும் இடையில் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்யப்படாமல் வாடகை அல்லது குத்தகைக்கு விடக்கூடாது.
> வாடகை ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பு, குத்தகைதாரர் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு வாடகை செலுத்தாத வரை அவரை நீக்க முடியாது.
> வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும், குத்தகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால், நில உரிமையாளருக்கு நான்கு மடங்கு வாடகை கோர உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் படி, குத்தகைதாரர் வீட்டை காலி செய்யாவிட்டால், நில உரிமையாளர் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணங்களைக் கோரலாம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான்கு மடங்கு வாடகை கோர நில உரிமையாளருக்கு உரிமை உண்டு.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, விரைவில் இந்த சட்டம் கொண்டுவர வேகமாக செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதத்தில் மாதிரி குத்தகை சட்டம் தொடர்பாக இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சட்டவரைவு ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.