அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உலகிலேயே குறைவான எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அதன் எடை, கால் கிலோவுக்கும் குறைவாக, அதாவது வெறும் 245 கிராம் மட்டுமே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு பெரிய ஆப்பிள் பழத்தின் எடையைப்போன்றது. தாயின் வயிற்றில் 23 வாரங்கள், 3 நாள்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த குழந்தை, கடந்த 2018, டிசம்பர் மாதத்தில் பிறந்தது.
வழக்கமான கர்ப்ப காலமான 40 வாரங்களில் 23 வாரங்கள் மட்டுமே தாயின் கர்ப்ப பையில் இருந்து இந்த குழந்தை, பிறந்து ஒரு மணி நேரத்தில் இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இந்நிலையில், அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து ஐந்து மாதங்கள் சிகிச்சையளிக்கப்பட்டது. தற்போது அந்தக் குழந்தை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் அளவுக்கு உடல்நலம் தேறிவிட்டதால் அதுகுறித்த செய்தியை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர்களுக்கு பிரைவஸி பாதிக்கக் கூடாது என்பதால் அதற்கு `செய்பி' என்று மாற்றுப்பெயரிட்டுள்ளனர். தற்போது இந்த குழந்தை 2.2 கிலோகிராம் எடையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தற்போது மருத்துவர்கள் கூறுகையில்; குழந்தை பிறந்தபோது அது பிழைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. அதன் நுரையீரல் வளர்ச்சியடையாத நிலையில் இருந்ததால், குழந்தையின் உடலுக்குள் செயற்கை சுவாசக்குழாய் நுழைக்கப்பட்டது. தற்போது குழந்தை நல்லபடியாக சுவாசித்தாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பும் தேவைப்படும்" என கூறினார்.