மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல. மகளிர் உரிமைக்கான அடிப்படை அங்கீகாரமாகும்

Womens Rights: பெண் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேலோங்கி இருந்த ஆணாதிக்கத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போராடி வென்றெடுத்த நாள்தான் உலக மகளிர் தினமாகும்.

Written by - Amarvannan R | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 9, 2022, 05:00 PM IST
  • வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.
  • ஆணாதிக்கத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போராடி வென்றெடுத்த நாள்.
  • மகளிர் தடம் பதிக்காத - சாதிக்காத துறையே இல்லை.
மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல. மகளிர் உரிமைக்கான அடிப்படை அங்கீகாரமாகும் title=

ஆண் - பெண் சிசுவை கருவறையில் சுமப்பவள் பெண்தான். அதற்கு ஆணின் பங்களிப்பு இருந்தாலும். மனித இனத்தின் உருவாக்கம் மகப்பேறிலிருந்துதான் தொடங்குகிறது. இன்று உலக மகளிர் தினமாகும். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு...!

உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதியன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.

"மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல. மகளிர் உரிமைக்கான அடிப்படை அங்கீகாரமாகும்"

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு" என்ற நிலைமாறி, வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்றைய காலகட்டத்தில் வானில் பறந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு அடித்தளமாக வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் அபார வெற்றியே இந்த மகளிர் தினம் கொண்டாடுவதற்கான ஆணிவேராகும். 

ஆயினும், அதற்கான வெற்றிகள் எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.

மேலும் படிக்க: மகளிர் தினம் 2022: பெண்கள் போராட்டம் பெண்கள் தின கொண்டாட்டம் ஆன கதை!

அக்காலத்தில் பெண் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேலோங்கி இருந்த ஆணாதிக்கத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை போராடி வென்றெடுத்த நாள்தான் உலக மகளிர் தினமாகும்.

மார்ச் 8ஆம் தேதிக்கும் மகளிர் தினத்துக்கும் என்ன சம்பந்தம்? 

உழைக்கும் அடித்தட்டு பெண்கள் பலரும் அறிந்துகொள்ளாத வகையில்தான் பல கிராமப் பெண்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் மகளிர் தினத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி "சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம்" என்ற கோரிக்கைகளை பிரெஞ்சு புரட்சியின்போது, பாரிஸிலுள்ள பெண்கள் போர்க் கொடியை உயர்த்தி முழக்கமிட்டனர்.

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என்று ஆண் - பெண் சமத்துவத்தை அந்நாளிலேயே ஆணித்தரமாக வலியுறுத்தி பாடினான் முண்டாசுக் கவிஞன் பாரதி, அப்பாடல் வரிகளுக்கேற்ப ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் சமவுரிமை பெறவேண்டும் என்றும், உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி பாரிஸிலுள்ள பெண்கள் திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: உண்மையான மகளிர் தினம் எது தெரியுமா? ஒரு பெண்ணின் கடிதம்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று வேலை நேரத்தை குறைக்கவும், உழைப்புக்கான கூலியை உயர்த்தவும்,  வாக்களிக்கும் உரிமையை  வலியுறுத்தியும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உழைக்கும் பெண்கள், ஓரணியாக திரண்டு மிகப்பெரிய பேரணியை நடத்தினர். அவற்றை நினைவுகூரும் வகையில் அடுத்தாண்டில் இதே நாளை "உலக மகளிர் தினமாக" அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.

1910 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அனுசரிக்க யோசனையை முன்வைத்தார் கிளாரா ஜெட்கின். இதில் 17நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து, 1911 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உலக மகளிர் சிறப்புற கொண்டாடப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் விதமாக 2011 ஆம் ஆண்டு 100 ஆவது உலக மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முதல் உலகப் போரின்போது, அமைதியையும் ரொட்டியையும் வலியுறுத்தி ரஷ்ய பெண்கள் மார்ச் 8 ஆம் தேதியன்று போராட்டத்தைத் தொடங்கினர். அந்த நாளையே 1975 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியன்று உலக மகளிர் தினமாக அங்கீகரிக்க தொடங்கினர்.

இப்படி உலக மகளிர் தினத்துக்கு பல்வேறு வரலாறு உண்டு.  ஆயினும், 1975ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாளை உலக மகளிர் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

 

மேலும், ஆண்டுதோறும் ஐ.நா. உலக மகளிர் தினத்தன்று ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது. அதன்படி ஐ.நா.வின் முறையான அறிவிப்புக்குப்பின் வந்த முதல் உலக மகளிர் தினத்தின் முழக்கம், "சமத்துவத்தை யோசி, அறிவுப்பூர்வமாக கட்டியெழுப்ப, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி" என்பதாகும். 

வானியல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, ஜோதிடம், விஞ்ஞானம், கட்டிட நிபுணர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், ஐஏஎஸ்., ஐபிஎஸ்., பயணிகள் விமானிகள் மற்றும் போர் விமானிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆட்டோ, கார் மற்றும் மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள் என பெண்கள் பெரும்பாலான துறைகளில் கால்பதித்து விட்டார்கள். 

அவர்கள் தடம் பதிக்காத -  சாதிக்காத துறையே இல்லை எனக் கூறும் அளவிற்கு மகளிர் முன்னேற்றம் அபார வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது என்பதே உலகறிந்த உண்மை.

உலக மகளிர் தினத்தில்  மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து உலகளாவிய பெருமைக்குப் பெண்கள் வித்திட வேண்டும் என நாமும் மகளிரை மனதார வாழ்த்துவோம்..

(கட்டுரை: ஜீ தமிழ் நியூஸுக்காக இரா. அமர்வண்ணன்)

மேலும் படிக்க: மகளிர் தினத்தில் இந்த ராசி பெண்கள் இதை செய்தால் அதிஷ்டம் நிச்சயம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News