ரயில் பயணத்தின் போது ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபருக்கு சிறைதண்டனை...!
உலகில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நம்மை அதிர்ச்சி கொடுக்கும்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதும் பெண்களுக்கு குறிப்பாக பாதுகாப்பு என்பது முழுமையாக பாதுகாப்பு இன்றி நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இரவில் தனியாக செல்லும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு இல்லை என்றால் ஓடும் ரயிலில் மக்கள் நிறைந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்காக இந்தியன் ரயில்வே துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து ரயிலில் பெண் பயணிகளை கேலி செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து RPF மூத்த அதிகாரி கூறியபோது., அண்மைக்காலமாக ரயில்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரயில்களில் பெண் பயணிகளை கேலி செய்வோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்.
இந்திய குற்றவியல் சட்டத்தின்படி ரயில்களில் பெண்களை கேலி செய்வோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் ரயில்வே சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது பெண்களுக்கான பெட்டிகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டுமென பரிந்துரை செய்துள்ளோம். மேலும் இணையவழி டிக்கெட் முன்பதிவில் முறைகேடு செய்வோருக்கு ரூ. 2 லட்சம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றார் அந்த அதிகாரி.