திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திப்பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் வரும் மக்களவை தேர்தல் வாக்குபதிவை பாதிக்காகது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். அந்த வகையில் இந்தாண்டு சித்ரா பவுர்ணமி வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு தொடங்கி மறுநாள் 19-ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் நிறைவடைகிறது.
இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தேர்தல் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சித்ரா பவுர்ணமி கிரிவளம் எந்த வகையிலும் தேர்தல் வாக்குப்பதிவினை பாதிக்காது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... முன்னதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தபோது உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையிலும், திருவண்ணாமலை நகர பகுதியிலும் 250-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இந்த வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவின் போது தடையோ, சிரமமோ, அபாயம் ஏற்படுமா? என்று பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் நாள் அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் தொடங்கும். எனவே அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம். நகரத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கிரிவலம் செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் பயண நேரத்தை கணக்கு செய்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.