Pongal 2025: தைப்பொங்கல் திருநாள்.. மகிழ்ச்சியும் செழுமையும் பொங்கும் பெருநாள்

Pongal 2025: தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2025, 08:38 AM IST
  • தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
  • பொங்கல் திருவிழாவின் மகத்துவம் என்ன?
  • பொங்கல் திருநாள், தமிழக பாரம்பரியம், விவசாய மரபுகள் மற்றும் தமிழ் காலச்சாரத்தின் சான்றாக உள்ளது.
Pongal 2025: தைப்பொங்கல் திருநாள்.. மகிழ்ச்சியும் செழுமையும் பொங்கும் பெருநாள் title=

Pongal 2025: இன்று தை திருநாள்!! தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. உழவர் திருநாளான பொங்கலன்று, நாம் விவசாயிகளுக்கும், விவசயத்திற்கு உதவும் இயற்கை, கால்நடைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.

தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. அறுவடை காலத்தில் விவசாயிகளின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் இந்த திருநாள் குறிக்கின்றது. பண்டைய இலக்கியங்களும், நூல்களும் பொங்கல் பண்டிகையை ஒரு சமூக கொண்டாட்டமாக, இயற்கைக்கான காணிக்கை காலமாக விவரிக்கின்றன.

பொங்கல்: மண்ணோடு கலந்த மகிமை

நம் நாட்டில் பல திருவிழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் சில பழங்காலம் முதல் கொண்டாடப்படும் விழாக்கள். சில காலப்போக்கில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொண்டாட்டங்கள். தமிழகத்தை பொறுத்த வரை, பொங்கல் தமிழ் மண்ணோடும், மரபோடும், பின்னிப்பிணைந்த ஒரு பண்டிகை. தமிழ் மக்களின் உழைப்பு, உணர்வு, வீரம், விவேகம், மரபு, மாண்பு ஆகியவற்றுக்கு சான்றாக இருப்பது பொங்கல் திருநாள்.

பொங்கல் திருவிழாவின் மகத்துவம் என்ன?

பொங்கல் திருநாள், தமிழக பாரம்பரியம், விவசாய மரபுகள் மற்றும் தமிழ் காலச்சாரத்தின் சான்றாகவும், தமிழர்களின் வாழ்வோடு ஒன்றாக கலந்த ஒரு நன்னாளாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த நாள் சூரியன் மகர ராசிக்கு மாறும் தருணத்தை குறிக்கின்றது. ஆகையால் இது மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் நாம் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துகிறோம். விவசாயிகள் தங்களுக்கு உதவிய சூரியன், பூமி, கால்நடைகள், இயற்கை ஆகியவற்றுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் பலர் ஒன்று கூடி பொங்கல் வைத்து புத்தாடை அணிந்து ஒருவருடன் ஒருவர் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு இந்த திருநாளை கொண்டாடுவதால் இது ஒற்றுமை, நன்றி உணர்வு மற்றும் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு நன்னாளாக பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | பொங்கலுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தை மாதம்

12 தமிழ் மாதங்களில் தை மாதம் மிகச்சிறப்பு வாய்ந்தது. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என கூறுவதுண்டு. அதாவது எவ்வளவு தடைகள் இருந்தாலும், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தை மாதம் பிறந்து விட்டால், அவை அனைத்தும் சரியாகி, தெளிவான பாதை அமைந்து நினைத்தது நடக்கும் என்பது பொருள். இப்படி இடர்களை களைந்து நன்மைகளை அளிக்கும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவும் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அன்பையும் செழுமையையும் பொங்க வைக்கின்றது. 

தைப்பொங்கல்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெக்கம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழா.

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த விழா பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றது. குளிர் காலத்திற்கு விடைகொடுத்து சூரியனை வரவேற்கும் காலம் இது. கர்நாடகாவில், இந்த விழா மகர சங்கராந்தி சுக்கி என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் முக்கியமாக விவசாயிகளுக்கான அறுவடை திருவிழாவாக உள்ளது. அசாமில் மகர சங்கராந்தியை மக் பிஹு என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் மக்கள் விருந்துகள் வைத்தும், எருமை சண்டை மற்றும் பாரம்பரிய அசாமிய போட்டிகளை நடத்தியும் கொண்டாடுகிறார்கள். பஞ்சாபில் இது லோரி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. நமது போகி பண்டைகை போல இதிலும் மக்கள் மரக்கட்டைகள் கொண்டு நெருப்பு மூட்டி அதை சுற்றி வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

நவீன காலத்தில் பொங்கல் பண்டிகையில் சில மாற்றங்களும் வந்துள்ளன. பொங்கல் பானைக்கு பதிலாக கேஸ் அடுப்பில் குக்கர் அல்லது பிற பாத்திரங்களிலும் பொங்கல் வைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் பொங்கல் கொண்டாடப்படும் முறையிலும், பூஜைக்கான வழிகளிலும் பல மாற்றங்கள் வந்தாலும், இயற்கைக்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அந்த நோக்கமும் பலர் ஒன்றாக கூடி ஒற்றுமையுடன் கொண்டாடும் விருப்பமும் இன்றும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. பல நூற்றாண்டுகளாக தமிழ் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும் பொங்கல் பண்டிகையின் சாரம் இன்னும் அதே இனிப்புடன் கலாச்சார பெருமையை உணர்த்தி மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நீடித்த பிணைப்புக்கு சான்றாக உள்ளது.

மேலும் படிக்க | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025: முதல் முறையாக 900 வீரர்கள்... பரிசுகள் என்னென்ன? - A to Z இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News