உலகறிந்த ஓர் ஆன்மிகவாதி; சுவாமி விவேகானந்தர்!

"100 இளைஞர்களை என்னிடம் ஒப்படையுங்கள். இந்திய திருநாட்டை உலகளவில் உயர்த்திக் காட்டுகிறேன்" என சுவாமி விவேகானந்தர் கூறி இருந்தார்.  

Written by - Amarvannan R | Last Updated : Jan 12, 2023, 08:39 AM IST
  • சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
  • அவர் பிறந்த ஜனவரி 12ஆம் தேதி அரசு `தேசிய இளைஞர் தினமாக' அறிவித்தது.
  • ஒழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் என்று கூறி உள்ளார்.
உலகறிந்த ஓர் ஆன்மிகவாதி; சுவாமி விவேகானந்தர்! title=

கொல்கத்தாவில் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் நாள் விஸ்வநாத தத்தருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்த சுவாமி விவேகானந்தருக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் “நரேந்திரநாத் தத்தா”.  நரேந்திரநாத்தின் ஆன்மிக குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.  பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் மீது அளவுகடந்த  நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் அவர் பிறந்த ஜனவரி 12ஆம் நாளை நடுவண் அரசு `தேசிய இளைஞர் தினமாக' அறிவித்தது. அதன்படி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினம் நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  "ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிகோலாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான்.  அவ்விளைஞர்களை நல்வழிப்படுத்தி ஒழுக்கமான பாதையில் அழைத்துச்சென்றால் போதும்.  அதுவே நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். 

ஒழுக்கமே ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச்செல்லும் ; ஒழுக்கமே ஒரு மனிதனை பக்குவப்படுத்தும் ; ஒழுக்கமே ஒரு மனிதனை மேன்மைப்படுத்தும் ; ஒழுக்கமே எல்லாவற்றுக்கும் முதன்மையாகும்.  மேலும் அவற்றை உணர்த்தும் வகையில் இளைஞர்களிடம், உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும் என ஆணித்தரமாக வலியுறுத்தினார் சுவாமிஜி.  அதனடிப்படையில்தான், 100 இளைஞர்களை என்னிடம் ஒப்படையுங்கள். இந்திய திருநாட்டை உலகளவில் உயர்த்திக் காட்டுகிறேன்" என  அவர் தீர்க்கமாக உரைத்தார்.  "தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே தலைசிறந்த மனிதர்களாக  உருவெடுக்க முடியும்" என்பதே சுவாமி விவேகானந்தரின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

மேலும் படிக்க | எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் முகவரியை மாற்றலாம்: இதை செய்தால் போதும்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவின் போது, குறுக்கிட்ட ஒரு இளைஞர், சுவாமிஜியிடம், "ஆன்மிகம் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு அவர், "தன்னைத்தானே உணரும் சக்திதான் ஆன்மிகம்" என பதிலுரைத்தார்.   அதே வேளையில், பகுத்தறிவு குறித்து மற்றொரு இளைஞர் அவரிடம் வினவிய போது," ஒரு செயலை செயல்படுத்தும்முன் அவற்றை தீர ஆராய்ந்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.  பகுத்தறிவே ஆன்மிகத்துக்கு அடிநாதமாகும். ஆகையால், ஆன்மிகமும் பகுத்தறிவும் நகமும் சதையும்போல பிரிக்க இயலாத ஒன்றாகும்.  மேலும் சுயநலம் கலக்காத தன்னலமற்ற செயலே ஆன்மிகத்தின் உச்சமாகும் ; அதற்கு உறுதுணையாக இருப்பது பகுத்தறிவாகும்" என்றார்.

மேலும் சுவாமிஜி அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் ஆற்றிய ஆன்மிக உரையானது ; உலகளவில் பேரெழுச்சியை உண்டாக்கியது.  அதன் சுருக்கம் : எனதருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசக்கரம் நீட்டி உளளன்போடு என்னை வரவேற்ற பண்பு என் அடிமனதில் ஆழமாக வேரூன்றிவிட்டது என தொடங்கிய சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகவுரை உலக நாடுகள் அனைத்தையும் உன்னிப்பாக கவனிக்க வைத்ததோடு அல்லாமல் உள்ளுணர்வையும் ஏற்படுத்தியது.  எல்லா சமயங்களும் உண்மை என நம்புகிறவர்கள் நாங்கள் என்ற அவர், “பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்குக் கற்பித்த சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன்.” என்றார்.

இறைவழிபாடு என்பது தனிமனித உரிமையாகும். கல்லோ ; மண்ணோ ; செடியோ; கொடியோ ; மரமோ ; புழுவோ ; பூச்சியோ இவற்றையெல்லாம் கடவுளாக நினைத்து வணங்குபவனின் உணர்வை மதிக்கின்ற மாண்பை பெற்ற மண்ணிலிருந்து இங்கு வந்திருக்கிறேன். இவற்றில் கேலிக்கோ கிண்டலுக்கோ இடமில்லை. பெற்ற தாயைப்போல் மற்ற தாயை மதிக்க கற்றுக்கொடுத்த ஆன்மிக பெரியோர்களின் அறிவுக்கிணங்க செயலாற்ற விரும்புகிறேன். ஏனெனில், மதங்களைக் கடந்த மனிதத்தை நேசிக்க கற்றுக்கொடுத்த சமயம் (இந்து சமயம்) என்றுமே எங்களுக்கு உயர்ந்ததுதான்; அதற்காக பிற மதங்களை சிறுமைப்படுத்தவில்லை ; அவரவர் மதம் அவரவர்களுக்கு உயர்ந்ததுதான் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம் என்றார் சுவாமி விவேகானந்தர்.  அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய அவரது ஆன்மிக உரை அவரை உலகறிய செய்தது என்பதே மறுக்கமுடியாத உண்மையாகும்.  அதனால்தான் உலகறிந்த ஓர் ஆன்மிகவாதியாக அவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகை: இரண்டு சிலிண்டர்கள் இலவசம்... அரசு அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News