ஆன்லைன் விற்பனை உலகில் 10 ஆண்டுகளை கடந்துள்ள அலிபாபா நிறுவனம், ஒரே நாளில் $30.7 பில்லியன் டாலர் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது!
இதில் முதல் $1 பில்லியன் டாலர் விற்பனை மட்டும் 1 நிமிடம் 25 விநாடிகளில் நடந்து முடிந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரதான போட்டியாளராக கருதப்படும் அலிபாபா நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையினை இந்த புதிய சாதனையின் மூலம் மீண்டும் முறியடித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது வெறும் ஆன்லைன் விற்பனையால் மட்டும் வந்துவிடவில்லை, அலிபாபா நிறுவனத்தின் கிளை சார்பு நிறுவனங்களான அலி எக்ஸ்பிரஸ், டயாபோ ஆகியவற்றின் மூலம் நாடுமுழுதிலும் நிகழ்ந்த நிகழ்நேர விற்பனையின் கூட்டுத்தொகையின் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பபட்டுள்ளது எனவும் அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அலிபாபா நிறுவனத்தால் நிர்வாகித்து வரப்படும் லசடா என்னும் இணைய பொருளாதார நிறுவனத்தின் மூலமும் இந்த வருவாய் பெறப்பட்டது என அலிபாபா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி, சீனாவின் சிறப்பு தினத்தை முன்னிட்டு இந்த ஒருநாள் சிறப்பு விற்பனை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஒருநாள் விற்பனை குறித்த திட்டத்தினை அறிமுகம் செய்தவர் டேனியல் ஜாங்க், ஜாக் மா-வின் அலிபாபா முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியவர் எனவும் அலிபாபா நிறுவனம் தெரிவித்து, இந்த வெற்றியினை டேனியலுக்கு சமர்ப்பித்துள்ளது.