இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக காணலாம்..!
1. தெலங்கான முதல்வர் கேசி ஆரையும், ஹைதராபாத் போலீஸாரையும் வாழ்த்தி வணங்குவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவம் குறித்து ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் பேசுகையில், திஷாவின் பெற்றோருடைய மனநிலை எனக்கு புரிகிறது. நான் இரண்டு மகள்களைப் பெற்றெடுத்த ஒரு தந்தை … எனக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். ஹைதராபாத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் அச்சத்தை ஊட்டுகிறது… தெலங்கானா மாநில முதல்வருக்கும், போலீஸாருக்கும் அவர்கள் செய்த சிறப்பான காரியத்துக்காக ஹேட்ஸ்ஆப் என்றார்.
2. ஹைதராபாத்தில் மெட்ரோ நியோ எனப்படும் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெலங்கானா மாநில ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கேடிஆர் முக்கிய ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மகா மெட்ரோ நிறுவன பொதுமேலாளர் பிரிஜேஷ் தீட்சித் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது ஹைதராபாத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் புதிய மெட்ரோ நியோ திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர், புணே, கிரேட்டர் நாசிக், தாணே ஆகிய நகரங்களில் மெட்ரோ நியோ திட்டத்தை மகா மெட்ரோ நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த மெட்ரோவில் ஒரேசமயத்தில் 350 பயணிகள் செல்லலாம். 2 நிமிட இடைவெளியில் மெட்ரோ கார்களை இயக்கலாம். பராமரிப்பு செலவும் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3. மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, இதில் முஸ்லிம்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகமாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமீத் ஷா விளக்கம் அளித்தார்.
மக்களவையில் அவர் பேசுகையில், பாதிக்கப்பட்டவர் ஒரு அகதி, ஊடுருவல்காரர் அல்ல. இரானில் துன்புறுத்தலுக்கு ஆளானதால் பார்சிகள் இந்தியாவுக்கு தஞ்சம் வந்தனர். இந்தியாவில் மதத்தின் பெயரால் துன்புறுத்தல் நடக்காது. அதேபோலத்தான் வடகிழக்கிலும்… சிறப்பு பிரிவு 371ல் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்றார். மேலும் இந்த மசோதா அருணாச்சலப் பிரதேசம், மிஸோரம், நாகாலாந்து ஆகியவற்றுக்குப் பொருந்தாது என்றும், மணிப்பூரில் இன்னர் லைன் பர்மிட் முறை அமல்படுத்தப்பட்ட பிறகே இந்த மசோதா அங்கு செயல்படுத்தப்படும் என்றார்.
4. அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் திர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பிரபல திங்க் டேங்க் பேர்வழிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி முடிவை நவம்பர் 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுதாரர் தரப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராக உள்ளார். அந்த மனுவில், ராமர் ஜென்மபூமியில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றக்கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
5. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தந்த பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ- வை நீக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்க உள்ளது. நீதிபதி என்வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது. வழக்கு மனுவில், குடியரசுத்தலைவர் ஒரு அவசரப் பிரகடனத்தின் மூலம் பிரிவு 370 மற்றும் 35 ஏ-வை நீக்கியதோடு, காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு மற்றும் காஷ்மீர் என பிரித்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அவருக்கு அந்த உரிமையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
6. டெல்லி தானியச்சந்தை தீ விபத்து வழக்கு விசாரணை குற்றப்பிரிவு போலீஸாரிடம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நவீன அறிவியல் உத்திகளைப் பயன்படுத்தி, விபத்து நிகழ்ந்த பகுதியில் 3டி லேஸர் ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யப்படுவதால் தீ ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. சம்பவப் பகுதிகளில் தடய அறிவியல் நிபுணர்களும் ஆதாரங்களை தீவிரமாக சேகரித்து வருகின்றனர். விபத்து குறித்து ஐபிசி பிரிவு 304 மற்றும் 308ன் கீழ் தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
7. மத்தியப் பிரதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் இம்ரதி தேவி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிவபுரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பெண்கள் கூச்சத்தை தவிர்ப்பதோடு முக்காடு அணிவதை கைவிடவேண்டும் என்றும் வெளியில் செல்லும் பெண் பிள்ளைகள் ஒழுக்கமாக இருப்பதாகவும், ஆண்பிள்ளைகள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்துக்கு ஆளாவதாகவும் கூறினார். மேலும் குடும்பச் சுமையை பெண்கள் ஏற்க நேரிட்டால் அவர்களது கணவர்களை வீட்டு வேலையைச் செய்ய சொல்லவேண்டுமென்றும் இம்ரதி தேவி வலியுறுத்தினார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
8. தூக்குக்கயிறு தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற பிகாரின் பக்ஸர் மத்தியச் சிறையில் புதிதாக 10 தூக்குக்கயிறுகளை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பாசக்கயிற்றில் தூக்கிடப்படும் 10 பேர் யார் என்ற கேள்வி பரபரப்பாக பேசப்படுகிறது. நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளிகளுக்கு இதன்மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பக்ஸர் ஜெயிலரிடம் கேட்டபோது, 10 தூக்குக்கயிறுகளை தயாரிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் அது யாருக்காக என்ற விவரம் தெரியாது என்றார். பக்ஸார் தூக்குக்கயிறுகளை மணிலா கயிறு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக கைதிகளின் உடல் எடைக்கேற்ப தூக்குக்கயிறுகளை தயாரிப்பது வழக்கமாகும்.
9. உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் அருகே நிகழ்ந்த பயங்கர கார் விபத்து காட்சி சமூக தலங்களில் வைரலாகியுள்ளது. புர்காஜி காவல் சரகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 58ல் அதிவேகத்தில் வந்த ஒரு கார் திடீரெனக் கட்டுப்பாடு இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 4 பேரில் இருவர் அதேஇடத்தில்
பலியாகினர். படுகாயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிவேகம் அதிக ஆபத்து என்று உணராமல் செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகரித்து வருகின்றன. சம்பவப்பகுதியில் இருந்த ஹோட்டலில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் இந்த காட்சி பதிவானது.
10. சவூதி அரேபியாவின் தூதர் சவுத் பின் முகமது, அரசு முறைப்பயணமாக தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். அங்கு மாநில ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கேடிஆரை அவர் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சர் முகமது அலி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.கான் உடன் இருந்தனர். தெலங்கானாவில் சவூதி அரேபியா கூட்டு முயற்சியில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
11. இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிபொழிந்துவரும் நிலையில் அங்கு வெப்பநிலை மைனஸ் 12டிகிரிக்கு சென்றுள்ளது. இதனால் லாஹுல்-ஸ்பீத்தி, சம்பா, கின்னார் பகுதிகளில் உள்ள ஏரிகள், நீர்வீழ்ச்சிகளில் பனி நிரம்பியுள்ளது. குடியிருப்பு மற்றும் ஏரிகளில் உறைபனி மூடியுள்ளது. மண்டி மாவட்டத்தில் மூவாயிரத்து 200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பிரபல காமருனாக் ஏரியில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைந்து காணப்படுகிறது. அங்கு வரும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பனிக்கட்டி படலத்தை உடைத்து தண்ணீரில் குஷியாக விளையாடுகின்றனர்.
12. ரஷ்ய நாட்டு ஒலிம்பிக் யூனியனுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஊக்கமருந்து பரிசோதனையில் அந்நாட்டு வீரர்கள் சிக்கியதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடையை வாடா எனப்படும் உலக ஆன்ட்டி டோப்பிங் முகமை விதித்துள்ளது. இதனால் அடுத்தாண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க முடியாது. அத்துடன் 2022ல் கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலிருந்தும் ரஷ்யா விலக்கப்பட்டுள்ளது. ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற வாடா செயற்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
13. 43 பேர் பலியான தில்லி தீ விபத்து குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமீத் ஷா இன்று விளக்கம் அளிக்கிறார். மாநிலங்களவையில் பாஜக எம்பி விஜய் கோயல் இந்தப் பிரச்னையை நேற்று எழுப்பியிருந்தார். இதனிடையே, விபத்து நிகழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் ரேஹான், மேலாளர் பர்குவான் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள் சிறைக்காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உயிரிழந்த 43 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருபது உடல் ஆய்வுக் கூறு சோதனை முடிந்துள்ளது.
14. மத்தியப்பிரதேசத்தின் போவாய் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரகலாத் லோதிக்கு பேரவையில் கலந்து கொள்ள மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, ராபூரா வட்டாட்சியர் தாக்கப்பட்ட வழக்கில் லோதிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பேரவைச் செயலகம் அவரது எம்எல்ஏ அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்தியப்பிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது பிரகலாத் லோதி எம்எல்ஏவாகத் தொடரலாம் என்ற அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.