தேசிய தலைநகர் டெல்லியில் ஜமா மஸ்ஜித்தின் அரச இமாம் சையத் அகமது புகாரி சனிக்கிழமை, அயோத்தி நில தகராறு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்ற முடிவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதைப் பொறுத்தவரையில், அவ்வாறான முடிவுகள் இதுவரையிலும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். "நாட்டில் முஸ்லிம்கள் அமைதியை விரும்புகிறார்கள், உச்சநீதிமன்றம் எந்த முடிவை அளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தனர்" என்று புகாரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
"நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்து-முஸ்லீம் பிரச்சினைக்கு தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான கேள்விக்கு, "மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வதைப் பொருத்தவரை, அவர் அதனுடன் உடன்படவில்லை" என குறிப்பிட்டுள்ளார்
ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் அயோத்தி ராம் ஜன்மபூமி தகராறில் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு நவம்பர் 9-ஆம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது, 68 நாட்கள் நீடித்த வரலாற்று கேசவானந்த பாரதி வழக்கின் பின்னர், 40 நாள் நீடித்த அயோத்தி வழக்கு உச்சநீதிமன்ற வரலாற்றில் இரண்டாவது மிக நீண்ட விசாரணையாக மாறியது.
முன்னதாக, ராம்ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நில தகராறு வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தை இந்து, முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த 3 அமைப்புகள் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்தது. இந்த தீர்ப்பு செல்லாது என்றும், அந்த நிலம் முழுமையாக இந்துக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில் இஸ்லாமியருக்கு மசூதி கட்டுவதற்கு ஏற்ற, முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்புக்கு இந்து மத மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.