டில்லி மற்றும் அதனை சுற்றிய புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் இன்று காலை வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெளிச்சம் குறைவாகவே உள்ளதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து செல்கின்றன.
விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலைகளில் பொறுமையாகவும், சாலை விதிகளை மதித்தும் செல்ல வேண்டும் என போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். டில்லியின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கி உள்ள படங்கள் சமூக வளைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டில்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து மேலும் சிக்கலாகி உள்ளது.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள மத தலங்களுக்கு செல்ல ஜான் கெர்ரி திட்டமிட்டு இருந்தார். ஆனால் டெல்லியில் பெய்து வரும் கன மழையால் அவரது பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜான் கெர்ரி நேற்று இந்த மத தலங்களுக்கு பயணம் செய்வதாக இருந்தது. பிறகு இன்று தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக ஜான் கெர்ரியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை இரவு ஜான் கெர்ரி இந்தியா வந்திறங்கியதும் போக்குவரத்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாகன நெரிசலில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல தெலுங்கானா ஐதராபாத் சிட்டியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டிடம் இடிந்து இருவர் பலி பலியாகினர்.