வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனை வெற்றி

Last Updated : Aug 29, 2016, 10:29 AM IST
வளிமண்டல ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் சோதனை வெற்றி title=

ராக்கெட் என்ஜின் தொழில் நுட்பத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

பொதுவாக ராக்கெட் என்ஜின்கள் எரிபொருட்களாலும், ஆக்சிடைசராலுகளாலும் இயங்கும். ஆனால் அமெரிக்கா, ரஷியா, சீனா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆகியவை மட்டும் ஸ்கிராம்ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தினை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளன. இந்த தொழில் நுட்பத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை என்ஜின் எடுத்துக்கொள்ளும். இதனால் ராக்கெட் எடை குறைவாகவும் திறன் மிக்கதாகவும் இருக்கும். பல மடங்கு செலவு மிச்சமாகும்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் ஸ்கிராம்ஜெட் என்ஜினை உருவாக்கினார்கள். இந்த என்ஜின் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டும், வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை ஆக்சிடைசராகவும்கொண்டு இயங்குவதாகும்.

இந்த ஸ்கிராம்ஜெட் என்ஜின்கள் இரண்டை ஏ.டி.வி. செலுத்து ராக்கெட்டில் பொருத்தி, விண்வெளியில் செலுத்தி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஸ்கிராம்ஜெட் என்ஜின் பொருத்திய ஏ.டி.வி. ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தினர். இந்த ராக்கெட் தனது 300 விநாடிகள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 320 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடா கடலில் விழுந்தது. இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனையால் நமது நாடு, அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வரிசையில் சேர்ந்துள்ளது.

ஸ்கிராம்ஜெட் இன்ஜின் மூலம் ராக்கெட்டை செலுத்துவது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுத் திட்டம் ஆகும்.

இந்த சாதனை குறித்து சென்னையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் கே. சிவன் நிருபர்களுக்கு அவர் கூறியதாவது:- ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85 சதவீத எடை, எரிபொருளாகத்தான் இருக்கும். ஸ்கிராம்ஜெட் இன்ஜினை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இது விண்வெளிப்பயணத்தில் முதல் கட்ட நடவடிக்கை ஆகும்.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 85 சதவீத எடை எரிபொருளாகத்தான் இருக்கும். எனவே, அந்த எடையைக் குறைக்கும் விதமாக வளிமண்டல ஆக்சிஜனை உறிஞ்சி எரிபொருளை எரிக்கும் தொழில்நுட்பத்தை ஸ்கிராம்ஜெட் இன்ஜின் கொண்டுள்ளது. இதனால் விண்ணில் செலுத்தும் வாகனத்தின் எடை மிக மிக குறைவாக இருக்கும். குறைவான எடையுடன் செல்வதால் செலவும் பல மடங்கு குறையும். இதனால் திறனும் மேம்படும். இவ்வாறு சிவன் கூறினார்.

ஜனாதிபதி பிரணாப் பாராட்டி உள்ளனர். டுவிட்டர் செய்தியில்:- எதிர்காலத்துக்கு உகந்த ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்காக இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள். இந்தியா உங்களால் பெருமை கொள்கிறது என கூறியுள்ளார்.

 

 

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் செய்தியில்:- நமது விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்புக்கும், சிறப்புக்கும் ஸ்கிராம்ஜெட் என்ஜின் சோதனை வெற்றி, சான்றாக அமைந்துள்ளது. இஸ்ரோவுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளும், விண்வெளி திட்டங்களும் இந்தியாவை எப்படி பெருமைப்பட வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். மறுபடியும் பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

 

 

 

Trending News