பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது!
சபரிமலை கோயிலின் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் நடை திறப்பு நிகழ்வு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 11 தொடங்கி 21 ஆம் தேதி வரை விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் வருடாந்திர உற்சவம் 21-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. கோயில் நடை திங்கள்கிழமை திறக்கப்படும்போது, கருவறை வாயிலில் தங்கத் தகடுகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்ட உள்ளன. தற்போதுள்ள கதவில் விரிசல்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, புதிய கதவுகள் பொருத்தப்பட உள்ளது.
தரமான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட புதிய கதவில் சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கத்திலான தகடுகள் வேயப்பட்டுள்ளன. இந்த தங்கத்துக்கான செலவை, ஐயப்ப பக்தர்கள் குழுவே ஏற்றுக் கொண்டதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் ஏ.பத்மகுமார் தெரிவித்தார்.
சமீபத்தில், பாரம்பரிய வழக்கத்தை மீறி, 10 முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை சந்நிதானத்தில் வழிபாடு நடத்த அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளம் முழுவதும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.