இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரமிது - நபிகள் நாயகம் சர்ச்சை குறித்து ராகுல் கருத்து

Rahul Gandhi : முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி பாஜக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்தியாவை ஒன்றிணைக்கும் தருணம் இதுவென காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 6, 2022, 02:01 PM IST
  • நபிகள் நாயகம் குறித்த கருத்துக்கு வளைகுடா நாடுகள் கண்டனம்
  • இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரமிது - ராகுல்காந்தி ட்வீட்
  • அனைத்து மதங்களையும் மதிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்
இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரமிது - நபிகள் நாயகம் சர்ச்சை குறித்து ராகுல் கருத்து title=

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கடந்த வாரம் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினார். இதனைத் தொடர்ந்து, டெல்லி பாஜக சமூக ஊடகப்பிரிவு தலைவரான நவீன் ஜிந்தால் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து பின்னர் அப்பதிவுகளை நீக்கினார்.

இவ்விவகாரம் சர்ச்சையான நிலையில், நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தும், நவீன் ஜிந்தாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முற்றிலும் நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இவ்விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வளைகுடா நாடுகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈரான், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. மேலும், இந்த கருத்து தொடர்பாக இந்தியா பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

மேலும் படிக்க | ”பாரத மாதா தூக்கில் தொங்க வேண்டும்” - பம்முகிறதா பா.ஜ.க?

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வெறுப்பு வெறுப்பைத் தான் வளர்க்கும். அன்பும், சகோதரத்துவமும் நிறைந்த பாதை தான் இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்தியாவை ஒன்றிணைக்க வேண்டிய நேரம் இது என ட்வீட் செய்துள்ளார். #BharatJodo (இந்தியாவை ஒன்றிணைப்போம்) என்ற ஹேஷ்டேக்குடன் ராகுல்காந்தி அந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

இவ்விவகாரத்தில் சர்வதேச இஸ்லாமிய நாடுகள் அடங்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கருத்து குறுகிய மனப்பான்மை கொண்டதாக உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த கருத்துகளை இந்தியா நிராகரிப்பதாகவும், அனைத்து மதங்களுக்கும் இந்தியா மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனி நபர்  வெளியிட்ட கருத்துகள் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை எனவும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரிந்தம் பக்சி தெளிவுபடுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | அரபு நாடுகளின் அழுத்தம்; சாட்டையை சுழற்றிய பாஜக

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News