அகமதாபாத் / புதுடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அகமதாபாத்தின் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ராகுல் காந்தி 15,000 ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனக்கூறி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றும் ரண்தீப் சுரஜ்வாலா மீது அவதூறு வழக்கு தொடுத்து அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் தலைவர் அஜய் படேல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கில், இன்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சிங் சுரஜ்வாலா இருவரும் அகமதாபாத்தின் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் கருத்து தெரிவித்தார். அதாவது "ஏன் அனைத்து திருடர்களுக்கும் மோடி" என்று பெயர் இருக்கிறது எனக் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி பாட்னா கோர்ட்டில் ராகுல் ஆஜரானார்.
நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ராகுல் காந்தி மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சார்பில் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.