ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் உட்பட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் புதுச்சேரியை தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஆட்சியை பிடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. தங்கள் வசம் இருந்த ஆட்சியை கேரளத்திலும் அசாமிலும் இழந்தது.
தற்போது காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி உள்ளார். அவருக்கு பதிலாக துணை தலைவர் ராகுல் காந்தியை தேசிய தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள் முன்வைக்க தொடங்கியுள்ளனர். சில நிர்வாகிகள் சோனியாவே தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடிக்கிறது.
உத்தரபிரதேச மாநில தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளதால் ராகுல்காந்தியை தலைவராக்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் விருப்பமாக உள்ளதாம். அடுத்த நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் பணிக்குழு கூட்டத்தில் அடுத்த தலைவர் யார் என்ற விவகாரம் விவாதிக்கப்படும் என்றும் அப்போது ராகுல் காந்தியை தலைவராக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதைக்குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறுகையில்:- ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக நியமிப்பது சரியான முடிவாக இருக்காது. சோனியாவுடன் இணைந்து பணியாற்றிய திமு.க போன்ற பெரிய கட்சிகள் ராகுல்காந்தி போன்ற தலைவரோடு இணைந்து செயலாற்ற முடியாது. இதனால் பல கூட்டணி கட்சிகளும் காங்கிரசை விட்டு விலக நேரிடும் என்றார்.
ஏற்கனவே பா.ஜ.க. இது ஒரு குடும்ப கட்சி என்றும். ராணி தனது இளவரசனை தேர்ந்தெடுப்பதை போல காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.