5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், பாஜக எம்பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் சென்ற மாதம் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7 ஆம் தேதி முடிவடைந்தது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை துவங்கி விறு விருப்பாக நடந்துமுடிந்தது. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில் TRS கட்சியும் மிசோராமில் MNF கட்சியும் வெற்றி பெற்றது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் சதிஷ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரசிடம் ஆட்சியை பாஜக பறிகொடுத்துள்ளது. அந்த மூன்று மாநிலங்களிலுள்ள 65 எம்பி தொகுதியில் 62 தொகுதிகளில் பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள தோல்விக்கான காரணம் குறித்து விவாதிப்பதுடன், நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார உக்தியை எவ்வாறு வகுக்க வேண்டும் என்று மோடி அறிவுரை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் தேசிய நிர்வாகிகள் மற்றும் மாநில பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற இருக்கிறது.