உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கும் சுகாதார திட்டமான ஆயுஷ்மன் பாரத் அறிமுகப்படுத்தினார்....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 23, 2018, 03:18 PM IST
உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார் மோடி!  title=

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய அரசு நிதியளிக்கும் சுகாதார திட்டமான ஆயுஷ்மன் பாரத் அறிமுகப்படுத்தினார்....! 

இந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். சுமார் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டமானது, உலகிலேயே மருத்துவ பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் துவங்கப்படும் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. 

2018 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையில் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். நாட்டின் எந்தவொரு மூலையில் உள்ள மருத்துவமனையிலும் இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் பயன்பெற முடியும். இதனால் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தின்கீழ் நாட்டின் எங்கு வேண்டுமானாலும், அரசாங்க மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளர்கள் சிகிச்சை பெற முடியும். 

இந்த திட்டத்திற்காக ஏற்படும் மொத்த செலவுத் தொகையில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசுகள் 40 சதவிகிதமும் பங்களிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசினாலும், மீதித் தொகையை மாநில அரசுகளும் ஏற்கும். இந்த புதிய மருத்துவக் காப்பீடு திட்டமானது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதில் பணம் செலுத்தி மருத்துவம் பெற்றுக் கொண்டு, பிறகு கட்டண பில்களை செலுத்தி, பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதி கிடையாது. 

ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையிலுள்ள முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.57 கோடி குடும்பங்களுக்கு 1027 சிகிச்சை முறைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரையிலான காப்பீட்டினையும், 154 சிறப்பு சிகிச்சைகளுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டினையும் மற்றும் 8 வகையான உயர்நிலை சிகிச்சைகளுக்கு மைய நிதியும் ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து சிகிச்சைக்கான செலவினையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் திட்டத்துடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டினையும் ஒருங்கிணைத்து செயல்படுவத்துவதன் மூலம் தமிழகத்திலுள்ள 77 லட்சம் ஏழை குடும்பங்களிலுள்ள சுமார் 2.85 கோடி நபர்கள் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான கட்டணமில்லா இலவச மருத்துவ சேவையை காப்பீட்டின் கீழ் தகுந்த மருத்துவமனைகளில் பெறமுடியும். இதற்குரிய பயனாளிகள் ஏற்கனவே முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கலாம். விடுபட்டவர்களையும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து புதிதாக காப்பீடு அட்டை வழங்கப்படும். 

முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களுக்கும் இனி ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டினை விரிவுபடுத்தி உறுதி செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திலுள்ள அனைத்து பயனாளிகள், அவர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தகுதிப் பெற்றவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான காப்பீடு உயர்த்தப்பட்டு வழங்கப்படும். 

மேலும் உயர்நிலை சிகிச்சைகளான காது நுண் எலும்பு கருவி பொருத்தும் சிகிச்சை, செவி புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் தமிழ்நாடு அரசின் மைய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தகுதி பெறாத ஆனால், மத்திய அரசு திட்டத்திற்கு அடிப்படையான பெருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு புள்ளி விவரப்படி தகுதியுள்ள நபர்களுக்கும் இனி முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்படும். 

 

Trending News