500, 1000 ரூபாய் செல்லாதது அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
தற்போது அந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். இவ்வாறு இதுவரை ரூ.3 லட்சம் கோடி பொது மக்களால் புதிதாக டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் இருப்புக்கு வந்துள்ளது. இப்போது இந்த ரூ.3 லட்சம் கோடி பணத்தையும் வர்த்தக ரீதியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த பணத்தை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதில் ஏழைகளின் வங்கி கணக்கில் இந்த பணத்தை டெபாசிட் செய்யலாம் என ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளனர்.
நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் ஏழைகள், குடும்ப பெண்கள், நலிந்த கலைஞர்கள் வங்கிகளில் கணக்குகளை தொடங்க வேண்டும் என்பதற்காக ஜனதன்யோஜன என்ற பெயரில் அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதில் எந்த தொகையும் டெபாசிட் செய்யாமலேயே வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இந்த வங்கி கணக்கை நாடுமுழுவதும் புதிதாக 25 கோடி பேர் தொடங்கி உள்ளனர். இவர்களில் 5 கோடியே 80 லட்சம் பேர் கணக்கில் ஒரு ரூபாய் கூட இருப்பில் இல்லை.இப்படி எந்த பணமும் இருப்பு இல்லாத கணக்குகளில் தலா ரூ.10 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்வது என்று ஆலோசனை நடந்து வருகிறது. இதன்படி ரூ.58 ஆயிரம் கோடி அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த பணத்திற்கு எவ்வளவு வட்டி கணக்கிடுவது எந்த வகையில் பணத்தை திரும்ப பெறுவது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.
ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தால் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் என கருத ப்படுகிறது. இதுபற்றி கட்சி தலைவர்கள் மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால்தான் பிரதமர் மோடி ஜனதன் கணக்கில் ரூ10 ஆயிரத்தை டெபாசிட் செய்யும் முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஏழை மக்களின் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும் என அவர் கருதுகிறார்.
பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒருவர் கூறுகையில்:- ஏழை மக்களுக்கு அதிகாரம் சென்றடைய வேண்டும் என்பதுதான் மோடி அரசின் திட்டம். ஆனால், எனவே, அதை சரிசெய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறினார்.