இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கு வருகிற 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நேற்று இரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளிலும் இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 19-ந் தேதி தேர்தல் முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படும். 23-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.