ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார்.
கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சிலையை திறந்து வைக்க தனி விமானத்தில் கோவைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் டெல்லிக்கு உடனடியாக புறப்படுகிறார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
இந்த விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
கோவையிலும் விழா நடைபெறும் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையில் 60 பேர் கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.விழா நடக்கும் இடத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.