தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் வளர்ச்சித்திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்த முடிவதில்லை என்றும், தனித்தனியே தேர்தல் நடத்தப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறினார்.
இதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் கலந்துகொண்டார். முன்னதாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.