கேரள மக்களின் இயல்பு வாழ்வினை விரைவில் மீட்டு தருவதே அரசின் நோக்கம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவிக்கையில்...
கேரள வெள்ளத்தால் தங்கள் வீடு, மக்களை இழந்து தவிக்கும் 846,680 பேரினை மீட்டு 3,734 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணி பேரிடர் மீட்புகுழு மற்றும் ராணுவ வீரர்களின் உதவியுடன் தொடர்ந்து தீவீரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1924-ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இயற்கை சீற்றமான இந்த வெள்ள பாதிப்பில் இதுவரை 370 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையப்பக்கதில் அதிகமாக வேண்டுகோள்கள் வருகின்றது. இதில் ஏற்கனேவே மீட்கப்பட்ட மக்களுக்கான வேண்டுகோள்களும் வருகின்றது. இதன் காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்படுகிறது. எனவே வேண்டுகோள்களை பதியும் மக்கள், தாங்கள் பதிவு செய்யும் வேண்டுகோள்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்துவிட்டு பின்னர் பதிவு செய்யவும்.
கேரளாவின் பெரும்பான்மை பகுதிகளில் தற்போது மின்சாரம், தொலை தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தகவல்களை பறிமாற்றம் செய்துக்கொள்ளுதல் நன்று.
தற்போது கேரளாவில் தேங்கியிருக்கும் மழை நீரின் அளவு குறைந்து வருகின்றது. விரைவில் கேரளத்தின் இயல்பு நிலையினை மீட்டெடுப்போம் என நம்புகின்றோம்.
கேரளாவை மீட்டெடுக்கு அண்டை மாநிலங்களும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கியிருப்பது மன அமைதி அளிக்கின்றது. ராணுவ வீரர்களுடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் தங்கள் படகுகளுடன் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். விரைவில் கேரளாவின் இயல்பு நிலையினை மீட்டெடுப்போம்... என குறிப்பிட்டுள்ளார்.