வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என உரையை ஆரம்பித்தார் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கோவை கொடீசியா மைதானத்தில் இன்று அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. கோவையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுகூட்டத்தில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பாஜக பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வழக்கம்போல் தமிழ் மொழியில் தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி அவர்கள்... "வணக்கம், சகோதர சகோதரிகளே, தமிழக மக்களுக்கு வணக்கம், மருதமலை முருகனுக்கு அரோகரா என உரையை ஆரம்பித்தார்.
உலகளவில் தமிழர் பண்பாடு சிறப்புடையது. தமிழ் கலாச்சாரம், மொழி தனித்துவம் வாய்ந்தது, சிறப்பானது என தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசிய மோடி, தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா அவர்களையும் நினைவு கூர்வதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது; உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது. நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது.
Tamil Nadu is with development oriented NDA, not the Mahamilawat. Watch from Coimbatore. https://t.co/AvluPSJXFa
— Chowkidar Narendra Modi (@narendramodi) April 9, 2019
எதிர்க்கட்சிகளிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக எந்த திட்டமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல் பாஜக உறுதியாக உள்ளது. நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக தரப்படும். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.
மேலும் தான் தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நான் தேசியம் குறித்து பேசினால் எதிர்க்கட்சிகள் என்னை கேள்வி கேட்பது சரியா? எனவும் கேள்வி எழுப்பினார்.