திருப்பதி மலைப்பாதையில் 2 பெண்களை சிறுத்தைப்புலி தாக்கியதன் எதிரொலியாக மலைப்பாதையில் மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி இரண்டாவது மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்களை சிறுத்தைப்புலி விரட்டி வந்துதாக்கியது. அதில் இருவரும் காயம் அடைந்தனர். மேலும் அந்த வழியாக கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை சிறுத்தைப்புலி விரட்டி தாக்க முயன்றது.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பங்கேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்திற்கு பின்னர், தற்போது திருப்பதி மலைப் பாதையில் இரண்டு பெண்களை சிறுத்தைப் புலி தாக்கிய சம்பவம் எதிரொலியாக, திருப்பதி மலைப்பாதையில் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனம், மொபட்டுகள் செல்ல அனுமதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனங்கள், மொபட்டுகள் செல்ல அனுமதி கிடையாது. அந்த வாகனங்களுக்குத் தடை விதிக்க உள்ளோம். அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி, அதற்கான உத்தரவு விரைவில் அமல்படுத்தப்படும். பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.