நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதற்கான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது!!
நிர்பயா வழக்கில் மரண தண்டனை கைதிகளை தூக்கில் ஏற்ற விசாரணை நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்குமாறு, மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீது, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1 ஆம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் 4 பேருக்கும் கடந்த ஒன்றாம் தேதி தண்டனையை நிறைவேற்ற கறுப்பு வாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளான பவன், வினய். அக்ஷய் ஆகியோரின் சட்ட ரீதியான நிவாரண வழிகள் இன்னும் முடிவடையவில்லை என அவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதாடியதை அடுத்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளான ஜனவரி 31 ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், நிர்பயாவின் பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மனு மீது, டில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.