மிரட்டும் நிபா வைரஸ்.. பீதியில் மக்கள்: மேலும் ஒருவர் பாதிப்பு, கேரளாவில் ஹை அலர்ட்!!

Nipah Virus: இந்த வைரஸால் ஏற்கனவே இருவர் இறந்துவிட்ட நிலையில், மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் எடுத்து வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2023, 10:08 AM IST
  • வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசின் கவலையும், மக்களின் பீதியும் அதிகரித்து வருகிறது.
  • கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மோனோக்ளோனல் ஆன்டிபாடியை வழங்கியுள்ளது.
மிரட்டும் நிபா வைரஸ்.. பீதியில் மக்கள்: மேலும் ஒருவர் பாதிப்பு, கேரளாவில் ஹை அலர்ட்!! title=

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் மற்றொரு நபர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 வயதான அந்த நபரின் மாதிரி மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அலுவலகம் வெள்ளிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நபர் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நிபா-பாசிட்டிவ் நோயாளிகள் முன்பு மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்ததாக மாநில சுகாதார அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நோயாளிகளின் எண்னிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. இதில், ​​இரண்டு பேர் இந்த தொற்றுநோயால் இறந்த நிலையில், இப்போது சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை நான்காக உள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை என கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் கீதா அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தனது ஃபேஸ்புக் பதிவில், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு இரண்டு நாட்களும் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

பீதியில் மக்கள்

கேரளாவில் நிபா வைரஸ் (Nipah Virus) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசின் கவலையும், மக்களின் பீதியும் அதிகரித்து வருகிறது. 

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொடிய நிபா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஒன்பது பஞ்சாயத்துகளில் கோவிட் காலம் போன்ற கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. மூச்சுத் திணறல் மற்றும் மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தி மூளையைச் சேதப்படுத்தும் இந்த வைரஸால் ஏற்கனவே இருவர் இறந்துவிட்ட நிலையில், மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் எடுத்து வருகின்றது. அதிக ஆபத்துள்ள தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கேரளாவை நிபா வைரஸ் குறி வைத்து தாக்குவது இது நான்காவது முறையாகும். 

மேலும் படிக்க | நிபா வைரஸ் அலர்ட்! பாதிப்புகள், அறிகுறிகள் என்ன..? தற்காத்துக்கொள்வது எப்படி..?

கேரளாவில் நிபா வைரஸ்: சமீபத்திய அப்டேட்ஸ் இதோ

- ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்த இருவரின் வீடுகளில் இருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

- அரசு மேலும் 11 மாதிரிகளை புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பியிருந்தது. இதில் யாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- அதிக ஆபத்துள்ள (ஹை ரிஸ்க்) தொடர்பு பட்டியலில் உள்ள மேலும் 15 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

- தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் நிம்ஹான்ஸ் ஆகியவற்றின் நிபுணர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு கேரளாவில் நிலைமையை ஆய்வு செய்யவும், நிபா தொற்று மேலாண்மையில் மாநில அரசுக்கு உதவவும் பணியமர்த்தப்பட்டுள்ளது.

- இதற்கிடையில், கொடிய நிபா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான மாநிலத்தின் கோரிக்கையின் பேரில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மோனோக்ளோனல் ஆன்டிபாடியை வழங்கியுள்ளது.

- இதன் செயல்திறன் இன்னும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்து மட்டுமே அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே வழியாகும்.

- வைரஸ் தடுப்பு மருந்தின் நிலைத்தன்மை குறித்து மத்திய நிபுணர் குழுவுடன் விவாதிக்கப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

- மாவட்டத்திலேயே வைரஸிற்கான மாதிரிகளை பரிசோதிப்பதற்காக ஒரு நடமாடும் BSL-3 (Biosafety Level-3) ஆய்வகமும் அனுப்பப்பட்டது.

- நிபா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபருடன் தொடர்புடைய 'அதிக ஆபத்து' தொடர்பு பட்டியலில் உள்ள அனைவரின் உடல் திரவ மாதிரிகளை எடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

- கேரளாவில் நிபா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறு ராஜஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | பரவும் நிபா வைரஸ்.. கேரளாவில் பீதி: மீண்டும் லாக்டவுன் போன்ற நிலை!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News