பாகிஸ்தான் பயங்கரவாதி பகதூர் அலிக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு எதிராக தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அவர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்ததாக அதில் கூறப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாராவுக்கு அருகே உள்ள கலாமாபாத்தில் கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பகதூர் அலி என்ற பயங்கரவாதி படையினரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ரூ.23 ஆயிரம் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
பகதூர் அலியிடம் விசாரணை நடத்திய போது, அவர் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள ஜகாமா கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெற்றிருந்தது தெரியவந்தது. இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.