மும்பையில் ரூ.1.7 கோடி மதிப்பில் திமிங்கலத்தின் எச்சத்தை கடத்தி வந்த மும்பை நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்!
திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன் படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கொண்டு உருவாக்கப்படும் திரவியம் மிகவும் விலை மிக்கத்தாக கருதப்படுகிறது.
தனித்துவம் மிக்க இந்த 'அம்பர்' உலகளவில் பல கோடி மதிப்பில் கிலோ கணக்கில் விற்பனை ஆகிறது. கடல் அலைகளால் கரைத்து அடித்து வரும்போது திமிங்கலத்தின் வயிற்றில் இயற்கையாகவே சுரக்கும் அம்பர்கிரிஸ் எனும் திரவம் உருண்டையாக வடிவெடுக்கிறது.
பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும் இந்த ‘அம்பர்’ நெருப்பினால் சூடு காட்டினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். இவை அயல்நாடுகளில் இருந்துதான் அதிகம் உற்பத்தி ஆகின்றன.
இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக திமிங்கல எச்சத்தை கடத்திய மும்பையைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்திய திமிங்கல எச்சத்தின் மதிப்பு சுமார் ரூ.1.7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நபர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக காவல்துறை அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.