டிக் டாக் பிரபலத்தை சந்திப்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு,14 வயது சிறுமி வீட்டைவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!
இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் டிக் டாக் செயலி முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் தாக்கத்தால் ஒரு வித்தியாசமான சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் 14 வயது சிறுமி, தன் பெற்றோருக்கு உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, டிக்டாக் பிரபலத்தை சந்திப்பதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் “அம்மா நான் வீட்டை விட்டு செல்கிறேன். நான் அப்பா மீது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன். என்னை பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள். நான் இந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொள்ளமாட்டேன் என்று கடவுள் மீது ஆணையாக சொல்கின்றேன். நான் ஏதாவது ஒரு பையனுடன் சென்றுவிட்டேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நான் தனியாக தான் செல்கிறேன்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சிறுமியின் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் டிக் டாக் பிரபலத்தை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர். நேபாளில் வசிக்கும் 16 வயது டிக் டாக் பிரபலம் ரியாஸ் அஃப்ரீனை சந்திக்க சென்றிருக்கக்கூடும் என்று நண்பர்கள் சொன்ன தகவலில் அடிப்படையில் போலீசார் சிறுமி வீட்டை விட்டு சென்ற 8 மணி நேரத்திற்குள் மீட்டனர்.