லுலு மாலில் நடு ராத்திரியில் குவிந்த மக்கள்! - ஆஃபர் மக்களுக்கா ? கொரோனாவுக்கா?

Lulu Mall Midnight Crowd : ‘ஆஃபருக்கு ஆசைப்படலாம். அதுக்குனு இப்படியா’ன்ற மாதிரி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லுலு மாலில் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது. அதன் விளைவு என்ன தெரியுமா ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 8, 2022, 01:43 PM IST
  • ப்ளாட் 50 ஆஃபர் ; நடுராத்திரியில் அளவுக்கு மீறி குவிந்த மக்கள்
  • திருவனந்தபுரம் லுலு மாலில் கட்டுக்கடங்காத கூட்டம்
  • ஒரு பக்கம் கனமழை வெள்ளம் ; மறுபக்கம் கொரோனா!
லுலு மாலில் நடு ராத்திரியில் குவிந்த மக்கள்! - ஆஃபர் மக்களுக்கா ? கொரோனாவுக்கா? title=

கடவுளின் சொந்த தேசத்துக்கு சுற்றுலா செல்பவர்களின் படையெடுப்பு ஓரு போதும் நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுபோல, அந்த தேசத்தில் இயற்கைப் பேரிடர்கள், பெருமழை வெள்ளம், வைரஸ் நோய் தாக்குதல்களும் ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. காம்ரேட்களின் போராட்டங்கள் நிறைந்த மண்ணில், கனமழை வெள்ளம், நிலச்சரிவுகள் என கடந்த மூன்று ஆண்டுகளாகவே இன்னல்கள் வாட்டி வதைத்து வருகின்றன. பேரிடர்கள் ஒருபுறமிருக்க, கொரோனா வைரஸ் பரவல் தாக்குதலும் கேரள மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 

மேலும் படிக்க | சும்மா வாங்குன லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு.!

இந்நிலையில், கேரள மாநிலத்திற்கு மற்றொரு தலைவலியை, ஒரே ராத்திரியில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள். திடீரென பரவும் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் எங்கும் ஒன்றாக கூடிவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகளைக் கேரள மாநில சுகாதாரத்துறை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல லுலு மால் ஒன்றில் ஃப்ளாட் 50 ஆஃபர் அறிவிப்பை பெரிதாக அம்மாநில சுகாதாரத்துறை கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடந்ததோ வேறு!.

அந்த ஆஃபர் என்னவென்றால், நடுராத்திரி 11.59க்கு தொடங்கி விடியற்காலை வரை எந்த பொருள் வாங்கினாலும் பாதி விலை மட்டுமே. இதனை அறிவித்தவுடன், நடுராத்திரிக்கு அப்படியென்ன மக்கள் வந்துவிடப்போகிறார்கள் என்றுதான் எல்லோரும் யூகித்தார்கள். ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது லுலு மாலில். கிட்டத்தட்ட அந்த மாலைச் சுற்றி அன்றிரவு முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரிசை முறை இல்லாமல் மாலுக்குள் எங்குப் பார்த்தாலும் மக்கள் வெள்ளம். 

வராண்டா, படிக்கட்டுகள், எஸ்கலேட்டர் உள்ளிட்ட எல்லா இடங்களில் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தால் லுலு மாலே ஸ்தம்பித்தன. அத்தனைப் பேரையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே புரியாமல் ஊழியர்கள் விழிபிதுங்கிக் கிடந்தனர். கடைகளின் ஷட்டரைத் திறந்ததும் முண்டியடித்துக் கொண்டுப் பொருட்களை எடுக்க பொதுமக்கள் ஓட்டம் பிடித்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

கட்டுக்கடங்காத கூட்டம் ஆபத்தான பின்விளைவுகளை உண்டுபண்ணிவிட்டது. அதாவது, கேரளாவில் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. அதாவது, லுலு மால் ஆஃபர் கூட்டத்தை அடுத்து, கேரளாவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 28 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் பலியாகி இருக்கின்றனர். 

மேலும் படிக்க | யானைக்குப் பிடித்த ‘மதம்’ - 5 மணி நேரம் பாகன்கள் போராட்டம்

தற்போது தென்மேற்குப் பருவ மழைக் காரணமாக கேரளாவில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் தவிர பிற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடித்து ஓடுகிறது. அதனைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு படையினர் குழுவாக ஆங்காங்கே முகாமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது லுலு மால் விவகாரம் கேரள சுகாதாரத்துறைக்கு மீண்டும் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. 

இந்தச் சம்பவத்தை கேரளாவின் கறுப்பு நாள் என்றும், இதுபோன்ற அலட்சியத்தை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அம்மாநில நெட்டிசன்கள் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். லுலு மால் நிர்வாகம் தரப்பில், இரவு நேரங்களில் ட்ராபிக் தொல்லையில்லாமல் அமைதியான சூழலில் நிம்மதியாக மக்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற ஆஃபர்களை அறிவிப்பதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News