டெல்லி: நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் மோடி தலைமையிலான பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 92 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதியில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. ஏனென்றால் குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும். ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இதேபோல கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்பொழுதும் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இம்முறையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிவுக்கு தேவையான இடங்களை பெறாமல் போனதால், அந்த பதவி கிடைக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ்.