தாமதமாகும் நம்பிக்கை வாக்கெடுப்பு; நீடிக்கும் கர்நாடக அரசியல் சஸ்பென்ஸ்!!

வரும் திங்கட்கிழமை அன்றும் விவாதத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவிப்பு!!

Last Updated : Jul 20, 2019, 07:37 AM IST
தாமதமாகும் நம்பிக்கை வாக்கெடுப்பு; நீடிக்கும் கர்நாடக அரசியல் சஸ்பென்ஸ்!! title=

வரும் திங்கட்கிழமை அன்றும் விவாதத்திற்கு பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவிப்பு!!

கர்நாடக மாநில ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை குமாரசாமி சட்டசபையில் கொண்டு வந்தார். கடந்த 18-ஆம்தேதி சட்டப்பேரவை தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அவர் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்தை உடனே வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென பா.ஜ.க சட்டமன்ற குழுத்தலைவர் எடியூரப்பா கோரியதை சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்தார். விவாதம் நடத்திய பின்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவையில் நேற்று முழுவதும் விவாதம் நடைபெற்றது. இதனிடையே பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நேற்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் அறிவுறுத்தினார். ஆனால் நேற்று வாக்கெடுப்பு நடத்தாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை கண்டித்து எடியூரப்பா தலைமையில் பா.ஜ.கவினர் சட்டசபைக்குள்ளேயே படுத்து தூங்கினார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா கடிதம் அனுப்பினார். ஆனால் விவாதத்தில் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்க இருப்பதால் அனைவரின் கருத்தையும் பதிவு செய்த பின்னரே வாக்கெடுப்பு நடைபெறுமென சபாநாயகர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அவையில் உறுப்பினர்கள் பலரும் பேசுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரணியினர் முழக்கமிடுவதாக அவை நடவடிக்கை தொடர்ந்தது. இதனிடையே இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை காதல் கடிதம் என்று விமர்சித்த குமாரசாமி, ஆளுநர் மீது தமக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் இழுத்தடிப்பதன் மூலம் குதிரை பேரம் நடைபெறுமென ஆளுநர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், எம்.எல்.ஏக்களை விலை பேசி வாங்கும் குதிரை பேரம் நடைபெறுவது இப்போது தான் ஆளுநருக்கு தெரியவந்ததா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இரவு 8.45 மணிவரை அவை நடைபெற்ற நிலையில், திங்கட்கிழமை வரை அவையை ஒத்தி வைப்பதாகவும், திங்கட்கிழமை அன்றும் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்பார்கள் என்றும், அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.

 

Trending News