அதிருப்தி எம்.எல்.ஏக்களை எச்சரித்த கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை எனில், அவர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படாது என எச்சரித்துள்ளார் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2019, 01:49 PM IST
அதிருப்தி எம்.எல்.ஏக்களை எச்சரித்த கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் title=

பெங்களூரு: காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகர் கால தாமதம் செய்ததால், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ராஜிநாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது என்றும், அதேசமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அதிருப்தி எம்எல்ஏ-க்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. சபாநாயகர் சுதந்திரமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்றும், அவருக்கு எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இன்று கர்நாடகா சட்டசபையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 11:30 மணிக்கு கர்நாடகா சட்டசபையில் விவாதம் தொடங்கியது. அப்பொழுது முக்கிய தலைவர்கள் பேசினார்கள். 

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குறித்து பேசிய சபாநாயகர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன். ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை நான் கட்டாயப்படுத்த வில்லை. அதேவேளையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வரவில்லை எனில், அவர்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படாது என எச்சரித்துள்ளார்.

சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சியில் வந்து இணைவார்கள் என்று நம்பிக்கையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி வாக்கெடுப்பை தாமதப்படுத்த முயற்சிக்கின்றன என கூறப்படுகின்றனர்.

Trending News