ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பந்திப்பூரா மாவட்டத்தில் வனப் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலையடுத்து, ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது கடந்த 50 நாட்களில் மட்டும் சுமார் 286 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நேற்றுவரை இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 14 வீரர்களும், இந்திய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் 26 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் முதலே ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து, இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.