ப.சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது; தள்ளுபடி செய்க: CBI

ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சி.பி.ஐ பதில் மனு அளித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2019, 12:49 PM IST
ப.சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது; தள்ளுபடி செய்க: CBI title=

 புதுடெல்லி: ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த மனுவுக்கு சி.பி.ஐ பதில் மனு அளித்துள்ளது. அதில் சிதம்பரத்திற்கு சாதகமாக உத்தரவு கொடுத்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறப்பட்டு உள்ளது.

INX மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், CBI காவலுக்கு எதிரான மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதாகவும், அதனால் அவரை திகார் சிறையில் அடைக்க வேண்டாம். வீட்டுக்காவலுக்கு அவர் தயாராக இருப்பதாக கூறினார்.

இதற்கு எதிராக சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை வரும் செப்.5 ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மாலைக்குள் ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்திய நீதிமன்றம், ப.சிதம்பரம் மனு நிராகரிக்கப்பட்டால் செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு அடுத்து பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் சி.பி.ஐ. வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி, சி.பி.ஐ. காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை நாளைக்கே (செப்டம்பர் 03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்தநிலையில், இன்று மீண்டும் சி.பி.ஐ. காவலுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மனுவை விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சி.பி.ஐ தரப்பில் இன்று காலை ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ப.சிதம்பரத்தின் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உகந்தது இல்லை. சி.பி.ஐ காவலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். எனவே சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சிதம்பரத்துக்கு சாதகமான உத்தரவு அளித்தால் அது தவறான முன்னுதாரணமாக அமையும் என சிபிஐ தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

Trending News