பாகிஸ்தானுக்கு கொடுத்த அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை திரும்ப பெற்றது இந்தியா; இதனால் வர்த்தக ரீதியாக அனைத்து உறவுகளும் தடைபடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 70 வாகனங்களில் 2,500 CRPF வீரர்கள் பயணம் மேற்கொண்டனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே பயங்கரவாதிக்கள் வெடிகுண்டு ஏந்திய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் பயணித்த கான்வாயில் புகுந்தது மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் 39 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் சரியாக நேற்று மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது. தற்போது வரை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக, மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த, தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தையும் இந்தியா பறித்துள்ளது.
டெல்லியில், 7 லோக் கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இதில் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இணைந்து அருண்ஜேட்லி செய்தியாளர்களை சந்தித்தார். தீவிரவாதத் தாக்குதலுக்கு துணைபோனவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்த அருண்ஜேட்லி, மறுக்க இயலாத வகையில் இந்த செயலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த தொழில்-வர்த்தகத்திற்கு சாதகமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பறித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல, சர்வதேச சமூகத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து அரசு முறை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அருண்ஜேட்லி கூறினார்.