India Corona Updates: நாட்டில் கொரோனாவின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தியாவில் தினசரி பதிவாகும் கோவிட் 19 தொற்று பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து காணப்படுகிறது. செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா வைரஸால் எந்த நபரும் இறக்கவில்லை என்று கூறினார்.
மேலும், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 3 வாரங்களில் 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா (Corona Virus) காரணமாக இறப்பு ஏதும் பதிவாகவில்லை என்றார். மேலும்,கடந்த ஐந்து வாரங்களில், கோவிட் -19 காரணமாக ஏற்படும் இறப்புகள் சராசரியாக 55 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் -19 தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், அதே நேரத்தில், குணமடையும் விகிதம் அதிகரித்து வருவதோடு, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஜனவரி இரண்டாவது வாரத்தில் சராசரி தினசரி இறப்பு 211 என்றும், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இது 55 சதவீதம் குறைந்து 96 ஆக உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1.43 லட்சமாக குறைந்துள்ளது, இது மொத்த தொற்று நோயாளிகளில் 1.32 சதவீதம் மட்டுமே. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், கோவிட் -19 தொற்று இருந்த 14,016 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இன்றுவரை, கோவிட் -19 தொற்று இருந்தவர்களில் மொத்தம் 1,05,48,521 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.
”இந்தியாவில் குணமடையும் நோயாளிகளின் விகிதம் 97.25 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது உலகின் மிக அதிக அளவாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா, பிரேசில் மற்றும் ஜெர்மனியில் குணமடையும் விகிதம் இந்தியாவை (India) விட குறைவாக உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 8 மணி வரை 62.6 லட்சம் பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், 5,482,102 பேர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 7,76,906 பேர் முன் கள பணியாளர்கள் என்றூம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.