பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
தெற்காசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளாக இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா முயன்று வருகின்றது.
எனினும் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கும் போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் போன்றவை இருநாட்டு அமைதி பேச்சுவார்த்தையினை தடுத்து வந்தது. மேலம், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் முடக்கியுள்ளது.
ஒருபுறம் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துவரும் நிலையில் மறுபுறம் பேச்சுவார்த்தை நடத்துவது முறையல்ல எனக்கூறி இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு இந்தியா தற்போது மறுத்து வருகிறது. மேலும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச முடியும் என கண்டிப்பாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் பதவியேற்றது. ஆட்சிக்கு வந்தது முதலே இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். இம்ரான் கானின் இந்த கோரிக்கையை ஏற்ற இந்தியா ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் அமைச்சரை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரங்கள் ஆன நிலையில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மூன்று காவல்துறை அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதன் காரணமாக இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளத என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் “இம்ரான் கான் ஆட்சிக்கு வந்து ஒருமாதத்தில் அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.