பாகி., JeM முகாம்களை தாக்க IAF குறிக்கோளை அடைந்தது: MEA

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி!!

Last Updated : Mar 9, 2019, 01:00 PM IST
பாகி.,  JeM முகாம்களை தாக்க IAF குறிக்கோளை அடைந்தது: MEA title=

இந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி!!

கடந்த 26 ஆம் தேதி, இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதுடன், அதில் ஒரு விமானமும் சுட்டுவீழ்த்தப்பட்டது. வான்பரப்பில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் விழுந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக கூறிக்கொண்ட பாகிஸ்தான், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறியது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் பகிர்ந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார். இதேபோல, இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் முயற்சியில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியிருப்பதற்கு கண்கண்ட சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் விமானப் படையின், எஃப்-16 போர் விமானங்களில் ஒன்று விங் கமாண்டர் அபிநந்தனால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்றும் ரவீஸ்குமார் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக்கொள்ளுமேயானால், தீவிரவாத குழுக்கள் மற்றும் எல்லை கடந்த தீவிரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும் எனவும் ரவீஸ்குமார் வலியுறுத்தினார். புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அதை மறுப்பதன் மூலம், தீவிரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த விஷயம்தான் என்று ரவீஸ் குமார் குறிப்பிட்டார். எனவே, மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது எனவும் ரவீஸ்குமார் தெளிவுபடுத்தினார்.

 

Trending News