மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி பேசியதாக அவர் மீது பிவண்டி கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து ராகுல் காந்தி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கோர்ட்டு இதை ரத்து செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி சார்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் கூறியதாவது:- மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என ராகுல் காந்தி ஒருபோதும் பேசவில்லை. அந்த அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு தான் இதில் தொடர்பு இருந்தது என பேசினார் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஸ்.நாரிமன் ஆகியோர் ராகுல் காந்தி கூறியதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எனினும் ராகுல் காந்தியின் பதிலை ஏற்று வழக்கு தொடர்ந்தவர்கள் தங்கள் மனுவை முடித்து கொள்ள விரும்புகிறார்களா? என நீதிபதிகள் கேட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ் என குற்றம்சாட்டி பேசியது தவறு என்று ராகுல் காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியுள்ளது அதனை தொடர்ந்து ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்.-ன் வெறுப்பு மற்றும் பிரித்தாளும் நடவடிக்கைக்கு எதிரான எனது போராட்டத்தை நிறுத்த போவதில்லை. நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டுவிட்டர்:-
I will never stop fighting the hateful & divisive agenda of the RSS. I stand by every single word I saidhttps://t.co/bUWzTHrgHW
— Office of RG (@OfficeOfRG) August 25, 2016