கல்வியாளர் அணந்த் குமார் அவர்களின் சூப்பர்-30 குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஹிரித்திக் ரோஷன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்!
முன்னதாக கடந்த சனி அன்று சூப்பர்-30 குழுவில் பயிற்சிப்பெற்ற 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கையில் இந்த சாதனைக்கு காரணமான அணந்த் குமார் அவர்களின் வாழ்க்கை படத்தில் நடித்து வரும் ஹிரித்திக் ரோஷன், அணந்த் குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to all of you. Anand Sir you have done it again. Making the world better one student at a time. #Super30 @teacheranand https://t.co/YED0S2LOk0
— Hrithik Roshan (@iHrithik) June 10, 2018
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "சூப்பர் 30" என்னும் பயிற்சி மையம் மூலம் பயிற்சியளித்து, தன் பயிற்சி மையத்தில் இருந்து ஆண்டிற்கு 98% மாணவர்களை ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழக நுழைவுத்தேர்வில் வெற்றி பெற செய்கின்றார் திரு அணந்த் குமார் அவர்கள்.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னாவில், ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1973-ம் ஆண்டு பிறந்தவர் தான் அணந்த் குமார்.
சிறு வயது முதல் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் வறுமையின் காரணமாக பல வாய்ப்புகள் பறி போவதை கண்டு மனம் வேதனை அடைந்தார். எனினும் தன்னமிக்கை இழக்காமல் வறுமையுடன் போராடி தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.
கணக்குப் பாடத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், அவற்றைத் தீர்ப்பதில் இருந்த முனைப்பு, எண்களை ஆனந்த் கையாண்ட விதம் ஆகியவை அவரைத் தனித்திறன் மிக்கவராக அடையாளம் காட்டின. அணந்த் குமாரின் திறமையை கண்டு அவரது ஆசிரியர்கள் மற்றும் கூட படிக்கும் மாணவர்கள் என அனைவரும் வியந்தனர்.
திறமை இருந்தபோதிலும் இவரது சிறுவயது கனவுகள் பலிக்காமலேயே போனது, இதனால் தனது கனவினைப் போல் இளம் மாணவர்களின் கனவு வெறும் கனவாகவே போய்விடக் கூடாது என ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சியளித்து வருகின்றார்.
அந்த வகையில் இந்த ஆண்டு அவரது பயிற்சி நிலையத்தில் இருந்து பயிற்சிப்பெற்று தேர்வு எழுதிய 30 மாணவர்களில் 26 பேர் IIT-JEE Advanced 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனையடுத்து அடுத்தாண்டிற்கான பயிற்சிவகுப்பில் 90 மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்!