ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசு, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஷஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் கிளர்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.
டெல்லியில் ஷஹீன் பாக்கில் பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக இரவுபகலாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது காவல்துறை பொறுப்பு. நாங்கள் உத்தரவிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அமித்சஹானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஷஹீன் பாக் பகுதியில் உள்ளவர்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட கோரியிருந்தார். இம்மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி தேர்தல் முடிந்து விசாரிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷஹீன் பாக் போராட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுச்சாலையில் எவ்வாறு தடுப்புகளை ஏற்படுத்த முடியும் என கேள்வி எழுப்பியது. அத்துடன், மனு தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசு, டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.